
ஜவ்வரிசி வெள்ளரி விதை உருண்டை
தேவை:
முழு ஜவ்வரிசி – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், வறுத்த வெள்ளரி விதை – 5 ஸ்பூன், நெய் – அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – இரண்டு சிட்டிகை, நெய் – 1 கப்
செய்முறை:
நெய்யை சூடாக்கி, ஜவ்வரிசியை நிறம் மாறாது வெளுக்க பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு அதிகப்படியான நெய்யை நீக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், வறுத்த வெள்ளரி விதை சேர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். பாகுடன் ஜவ்வரிசி கலவையை சேர்த்து, கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும்.
கருப்பு உளுந்து உருண்டை
தேவை:
கருப்பு உளுந்து – 1 கப்
நெய் – 1/4 கப்
வெல்லம் – 3/4 கப் (தூளாக்கியது)
ஏலக்காய்த்தூள் – 2 ஸ்பூன்
முந்திரி – 6
செய்முறை:
கருப்பு உளுந்தை வாணலியில் மணம் வரும் வரை வறுக்கவும். வறுத்த உளுந்தை ஆறியதும் மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். வெல்லத்தை சுத்தமாகத் தூளாக்கி, ஏலக்காய்பொடி, உளுந்து மாவுடன் கலக்கவும். சிறிது நெய் சூடாக்கி முந்திரியை வறுத்து கலக்கவும். தேவையான அளவு சூடான நெய் சேர்த்து, உருண்டையாக பிடிக்கவும். சத்தான கறுப்பு உளுந்து உருண்டை தயார்.
கைக்குத்தல் அரிசி களி உருண்டை
தேவை:
கைக்குத்தல் அரிசி - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
அரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இதில் பொடித்த அரிசியை சிறிது சிறிதாக கொட்டி கட்டி பிடிக்காமல் கிளறிவிடவும்.
பிறகு அரிசி வெந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து கிளறிவிடவும். வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடியை அதில் போடவும். இந்த கலவை சட்டியில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும். சிறிது சூடாக இருக்கும்போதே உருண்டை பிடித்து தேங்காய் துருவலில் பிரட்டவும். சத்து நிறைந்த கைக்குத்தல் அரிசி களி உருண்டை தயார்.
ஸ்வீட் வீட் பால்ஸ்
தேவை:
கோதுமை மாவு – 2 கப்
நெய் – 1/4 கப்
வெல்லம் – 1 கப் (தூளாக்கியது)
ஏலக்காய்த்தூள் – 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல்– 1 கப்
செய்முறை:
முதலில் வாணலியில் சிறிது நெய் விட்டு, கோதுமை மாவை சிவக்க வறுத்துக்கொள்ளவும். பின்னர் அந்த மாவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து வறுக்கவும். இந்தக் கலவையை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும்.
பின்னர் அதே வாணலியில் நீர் விட்டு வெல்லப் பாகு செய்துகொள்ள வேண்டும். முதிர் பாகு பதம் வந்ததும், ஏலக்காய் தூள், கோதுமை மாவு, தேங்காய்த் துருவல் கலவையை பாகில் கொட்டி, நெய் விட்டுக் கிளறவும். நன்கு திரண்டு வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும், உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான கோதுமை மாவு உருண்டை தயார்.