
குருமா நீர்த்துவிட்டால், அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸைப் போட்டுக்கொதிக்க வைத்தால் குருமா கெட்டியாகிவிடும். அத்துடன் சுவையும், சத்தும் அதிகரிக்கும்.
எந்தக்காயைப் போட்டு சாம்பார் செய்தாலும் அத்துடன் கூட இரண்டு பெரிய நெல்லிக்காய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கிப்போட்டு செய்யுங்கள். இதனால் சாம்பாரின் சத்தும், சுவையும் கூடும்.
தக்காளிப் பச்சடி, கீரை மசியல் செய்யும்போது கடுகுக்கு பதில் சீரகத்தை தாளித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
வெஜிடபிள் சூப் செய்யும்போது ஒரு ஸ்பூன் வெண்ணையில் ஒரு ஸ்பூன் மைதா மாவு போட்டுச் சிறிது வறுத்து பேஸ்ட் போலாக்கிச் சேர்த்தால் சூப் நல்ல திக்காக இருக்கும்.
முள்ளங்கி இலையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை வறுத்துச் சேர்த்தால் சுவையான துவையல் ரெடி.
அடைமாவை முதல்நாள் அரைத்துவிட்டு, மறுநாள் இட்லித்தட்டில் வைத்து இட்லி செய்யலாம். பஞ்சுபோல் பருப்பு இட்லி சூப்பராக இருக்கும்.
பட்டர் பீன்ஸ் பொரியல் செய்யும்போது, தேங்காயுடன், இரண்டு ஸ்பூன் சீரகமும், பச்சை மிளகாயையும் அரைத்துப் போடுங்கள். பொரியல் வித்தியாசமான மணத்துடன் இருக்கும்.
வெங்காயப் பக்கோடா செய்யும்போது, கடலைமாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றுடன் சேர்த்து பிசைந்து பக்கோடா போட்டால் கடையில் வாங்கின பக்கோடா போல் மொறு மொறுப்பாக இருக்கும்.
இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி அரைக்கும்போது, இரண்டோ, மூன்றோ புதினா இலைகளைச்சேர்த்து அரைத்தால் சட்னி நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
கேரட், முள்ளங்கி, நூல்கோல் போன்றவற்றின் தோல்களுடன் ஒரு வெங்காயம், தக்காளி, நான்கு பல் பூண்டு, பிடி துவரம்பருப்பு போட்டு வேகவைத்து அரைத்து சுவையான சூப் செய்யலாம்.
ரவாதோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் சோளமாவு கலந்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.
கரைத்த மாவு தோசை செய்யும்போது, அதில் மிளகு, சீரகப்பொடியை கலந்து செய்தால் மிளகு தோசை மாதிரி வாசனையாய் இருக்கும்.