முறுகலான சட்டி தோசை - பரங்கிக்காய் தோல் சட்னி செய்யலாமா?
இந்த தோசையை செய்ய அரிசியே வேண்டாம் என்றால் ஆச்சரியமாக உள்ளதா. வெறும் உளுந்து மட்டும் போதும். முறுகலான மொறு மொறு சட்டி தோசை சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
முறுகலான சட்டி தோசை:
உளுந்து 1/2 கப்
ரவை 1 கப்
உப்பு
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 3
சீரகம் ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய் சிறிது
உளுந்தைக் களைந்து தண்ணீர்விட்டு இரண்டு மணி நேரம் ஊற விடவும். ரவையை தேவையான அளவு நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் உளுந்தை நன்கு அரைத்து எடுக்கவும். அதில் ஊறிய ரவை, தேவையான அளவு உப்பு சேர்த்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து தயாராக உள்ள மாவில் சேர்த்து நன்கு கலந்து விடவும். புளிக்க வைக்க நேரமில்லை உடனடியாக தோசை வார்க்க வேண்டும் என்றால் புளித்த தயிர் ஒரு கப் விட்டு கலந்து வார்க்கவும்.
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் விட்டு அரைத்த மாவில் பாதியை விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டை போட்டு மூடி வேகவிடவும். நன்கு பொன்முறுகலாக ஆனதும் திருப்பி விட்டு நன்கு சிவந்ததும் எடுக்க மிகவும் ருசியான சட்டி தோசை தயார். இதனை பீட்சா கட்டர் கொண்டு கட் செய்து நல்லெண்ணெயில் குழைத்த மிளகாய்ப் பொடி, பீர்க்கங்காய் தோல் சட்னியுடன் பரிமாற ருசியாக இருக்கும்.
பரங்கிக்காய் தோல் சட்னி:
பரங்கிக்காய் தோல் 1/2 கப்
சின்ன வெங்காயம் 6
பூண்டு 2 பல்
உப்பு தேவையானது
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
உளுத்தம் பருப்பு 2ஸ்பூன்
மிளகாய் வத்தல் 5
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சிறிது, நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
பரங்கிக்காயின் தோலை சீவி தண்ணீரில் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சிறிது விட்டு பரங்கிக்காய் தோல், அதற்கு தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தோல் மென்மையானதும் அத்துடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பற்களை போட்டு நன்கு வதக்கி எடுக்கவும். உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் இரண்டையும் சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சிறிது ஆறியதும் உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொண்டு வதக்கிய பரங்கிக்காய் தோலையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையை சிறிது எண்ணெய் விட்டு தாளித்து கடுகு பொரிந்ததும் சட்னியில் சேர்த்து பெருங்காயத்தூள் போட்டு கலக்கவும். மிகவும் ருசியான சட்னி தயார்.