

கறிவேப்பிலை முடிக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவுக்கு நம்ப உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் இதை பெரும்பாலானவர்கள் ஒதுக்கி விடுகின்றனர்.
தினமும் நாம் உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்-A கிடைக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, தலைமுடி உதிர்வதைத் தடுத்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
மேலும் அஜீரணக்கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் நார்ச்சத்து இதில் உள்ளது. கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளதால், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகையைத் தடுக்கிறது.
அதுமட்டுமின்றி உணவில் இருந்து கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சமையலில் சேர்த்து உண்பதுடன், தினமும் காலையில் 5 முதல் 10 புதிய கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடுவது உடலுக்கு அதிகபட்ச நன்மைகளைத்தரும்.
அந்த வகையில் வழக்கமாக கறிவேப்பிலையை உணவில் தாளிக்க அல்லது துவையல், சட்னி, குழம்பு, கறிவேப்பிலை சாதம் என்பது போன்றுதான் செய்து சாப்பிட்டு இருப்பீங்க.
ஒருமுறை சுவையான, ஆரோக்கியமான மற்றும் விரைவாகச் செய்யக்கூடிய இந்த கறிவேப்பிலை மிளகு கொழுக்கட்டையை வீட்டில் செய்து பாருங்க.. அப்புறம் திரும்ப திரும்ப செய்ய சொல்லி கேட்பாங்க...
குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க விரும்பினால் இப்படி செய்து கொடுக்கலாம். அதுமட்டுமின்றி சாப்பிடும்போது கறிவேப்பிலையை ஒதுக்கி வைப்பவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் தட்டை காலி செய்வார்கள். இன்று கறிவேப்பிலை மிளகு கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - அரை கப்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை எடுத்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். நீரை வடித்துவிட்டு, அரிசியை நன்றாகக் கழுவவும். ஒரு துணியில் பரப்பி மின்விசிறிக் காற்றில் உலர்த்தவும். பிறகு அதை எடுத்து ரவை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், மிளகு, கறிவேப்பில்லை போட்டு வறுத்து ஆறவைக்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சிஜாரில் போட்டு சற்று கொரகொரப்பான அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே கடாயில் மேலும் சிறிது நெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் பொடித்து வைத்த கறிவேப்பிலை பொடியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதில் 2 கப் தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். நன்றாக கொதி வந்ததும் அதில் பொடித்த அரிசி ரவையை சேர்த்து கிளறவும்.
தண்ணீர் வற்றி கலவை வெந்து கெட்டியாக வரும் போது தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கொட்டியான பதம் வரும் வரை நன்றாக கிளறி இறக்கவும்.
இந்த கலவை நன்றாக ஆறியதும் கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.
அடுத்து இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும், இட்லி தட்டில் பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை அடுக்கி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கறிவேப்பிலை மிளகு கொழுக்கட்டை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.
இந்த கொழுக்கட்டையை சிறுதானியங்களை வைத்து செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.