
பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டாச்சு. காலை மாலை என இரண்டு வேளையும் இட்லி, தோசை, உப்புமா என்று செய்து கொடுத்தால் பிள்ளைகள் அதனை அதிகம் விரும்புவதில்லை. வெரைட்டியாக கேட்பார்கள். அவர்கள் விரும்பும் வகையில் விதவிதமான கட்லட்களை செய்து தக்காளி சாஸுடன் பரிமாற ருசித்து சாப்பிடுவார்கள்.
கட்லெட் என்ற சொல் 'கோட்லெட்' என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவானது. பிரெஞ்சு உணவு வகைகளில் ஒரு பொதுவான பசியை தூண்டும் உணவாக இருந்தது. பின்னர் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து பல வழிகளில் தயாரிக்கப்படுகின்றன.
கட்லெட் செய்யும்போது அவை எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து செய்யலாம். முட்டை விரும்பாதவர்கள் அதற்கு பதில் பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து கட்லட் கலவையுடன் சேர்த்து பிசைந்து செய்ய உதிராமல் வரும்.
நூடுல்ஸ் கட்லெட் செய்யும்பொழுது நூடுல்ஸ், காய்கள் என தனித்தனியாக பிரிந்து வராமல் இருக்க சோள மாவு சேர்த்து பிசையலாம். தட்டியதும் பிரெட் பவுடரில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பொரிக்க சிறிதும் உதிராமல் அழகாக வரும்.
பனீர் வெஜ் கட்லெட்டுகள் செய்வதற்கு அரை கப் துருவிய அல்லது மெல்லிய துண்டுகளாக நறுக்கிய பனீரை மசித்த காய்களுடன் சேர்த்து செய்ய ருசியும் சத்தும் கூடும்.
சீஸ் கட்லெட்டுகள் செய்ய அரை கப் துருவிய மொசரெல்லா சீஸ் சேர்த்து செய்யலாம். சீஸ் வெளியே வராமல் இருக்க கட்லெட்டுகளை இரண்டு மூன்று முறை பிரெட் பவுடரில் பிரட்டி எடுத்து பொரிக்கலாம்.
வெஜிடபிள் கட்லெட் செய்யும்பொழுது காய்கறிகளை ஆவியில் வேக வைத்து செய்ய சத்து கெடாமல் இருப்பதுடன் மிகவும் ருசியாகவும் இருக்கும்.
சிலருக்கு கடலை மாவு வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாது. அவர்கள் கடலை மாவுக்கு பதில் மைதா மாவு, அரிசி மாவு அல்லது அவலை நைசாக பொடித்து சேர்த்து செய்யலாம்.
கட்லெட் மாவை செய்து முடித்ததும் எண்ணெயில் பொரிப்பதற்கு முன் பிரெட் தூள்களில் பிரட்டி எடுப்பது வழக்கம். பிரெட் பவுடர் இல்லையென்றால் கவலை வேண்டாம். அவலை வாணலியில் லேசாக சூடு செய்து கரகரப்பாக பொடித்து உபயோகிக்கலாம்.
கொண்டைக்கடலையை பொதுவாக சுண்டல், குழம்பு என்று செய்வோம். வித்தியாசமான சுவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும்படி கொண்டைக்கடலை கட்லெட் செய்யலாம்.
கொண்டைக்கடலையை ஊறவைத்து உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து இஞ்சி பூண்டு விழுது, சோம்பு சேர்த்து கட்லெட்டுகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம் அல்லது தோசைக்கல்லில் குறைவான எண்ணெயில் கட்லெட்டுகளை தயார் செய்யலாம்.
மிருதுவான கட்லெட் வேண்டுமானால் காய்கறிகளை அதிகம் வேக விடாமல் முக்கால் பதம் வேகவைத்து செய்ய சரியாக இருக்கும்.
பிரெட் க்ரம்ஸ் இல்லையெனில் அவல் பவுடர் அல்லது ஓட்ஸ் பவுடரை பயன்படுத்தி விரும்பிய வடிவில் தட்டி எண்ணெயில் பொறித்தோ அல்லது தோசை கல்லில் குறைவான எண்ணெயில் செய்தோ சுவைக்கலாம்.
சாதம் வடித்தது அதிகம் மீந்துவிட்டால் கவலைப்படாமல் அனைவரும் விரும்பும்படி மாலை நேர சிற்றுண்டியாக கட்லெட் செய்யலாம். சாதத்தை நன்கு மசித்துக்கொண்டு வேகவைத்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, காரப்பொடி, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கட்லெட்டுகளாக தட்டி எண்ணெயில் பொரித்தோ தோசைக்கல்லில் குறைவான எண்ணெயில் செய்தோ சுவைக்கலாம்.
பசலைக்கீரை, முளைக்கீரை, முருங்கை கீரை, பாலக்கீரை என கீரைகளை பொடியாக நறுக்கி சேர்த்து கட்லெட் செய்ய கீரைகளை விரும்பாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.