
உடலில் ரத்தமே இல்லை. எதைத்தான் சாப்பிடுவது? என வருத்தத்தில் இருப்பவரா நீங்கள்? கவலையைவிடுங்கள். உங்களுக்காகவே உள்ளது பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான ரத்தசாலி. ஆயுர்வேதத்தில் 'ரத்த சாலி' என்ற பெயரில் இந்த அரிசி குறித்து தனி அத்தியாயம் உள்ளது எனக் குறிப்பிடுகின்றனர்.
ரத்தசாலி அரிசி, அதன் அதிக அந்தோசயனின் உள்ளடக்கம் காரணமாக சிவப்பு நிறத்திற்கு பெயர் பெற்ற அரிசி வகைகளில் அரிதான மற்றும் விலைமதிப்பற்ற அரிசி வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்றவையாக உள்ளது.
எளிதாக செரிமானம் ஆகக்கூடிய இதில் ஜிங்க், விட்டமின் பி5, கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடு அதன் குறிப்பிட்ட வகை மற்றும் செயலாக்கத்தைப் பொறுத்தது எனினும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மாற்றாக இருக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அத்துடன் ரத்த ஓட்டத்தை சீர் செய்வதால் நாளடைவில் ரத்த கொதிப்பை (Low BP மற்றும் High BP) கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சுமார் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் ரத்தசாலி அரிசி, ரத்தத்தில் உள்ள பிளாட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு விரைவாக சிவப்பணுக்களின் எண்ணிக்கையை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கும் உதவுவதால் பாரம்பரிய அரிசி வகைகளில் அதிகம் கவனம் பெறுகிறது.
இதில் அரிசியில் நார்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடை குறைப்புக்கு சிறந்த உணவாகும். மேலும் உணவு செரிமானம் எளிதாக இருப்பதால் மலசிக்கல் நோயிலிருந்து விடுபட இது உதவுகிறது.
ரத்தசாலி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவை தினந்தோறும் ஒருமுறை உட்கொண்டால், குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்கள் போன்றவர்களின் 'டயட்'டில் இதை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயம். ரத்தசோகை குறைபாடு உள்ள குழந்தைகள், பெண்கள் அன்றாடம் பயன்படுத்த வேண்டிய உணவு பட்டியலில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று ரத்தசாலி அரிசி.
இந்த அரிசியை வாங்கி சுத்தம் செய்து நான்கு மணிநேரம் ஊற வைத்து, கஞ்சியாக்கி குடிப்பதால், ரத்த சோகை உள்ளவர்களுக்கு விரைவிலேயே சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சாதாரண நிலைக்கு வருவதாக உறுதிசெய்யப்பட்ட ஆய்வுகள் உள்ளன. ஜீரணிக்க எளிதான இந்தக் கஞ்சி மேலும் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது என்கின்றனர்.
ரத்த அணுக்களை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், எடையை சீராக பராமரிக்கவும், நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும் உதவும் ரத்த சாலி அரிசியைக் கண்டால் நாமும் வாங்கி உண்டு உடல் நலம் காப்போம்.