
பேரீச்சம்பழ பாயசம்
தேவை:
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 20
பசும் பால் - 3 கப்
முந்திரி மற்றும் பாதாம் - தலா10
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
பேரீச்சம் பழத்தை ஒரு கப் பாலில் ஊற வைத்து, அரை மணி கழித்து மிக்சியில் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
2 கப் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி, பாதியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சிக் கொள்ளவும்.
அரைத்த பேரிச்சை கலவையை காய்ச்சிய பாலில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
இதில் 1 ஸ்பூன் நெய் விட்டு, முந்திரி, பாதாம் பருப்புகளை சிவக்க வறுத்து, பாலில் சேர்க்கவும். சூப்பரான பேரீச்சம்பழ பாயாசம் ரெடி.
இந்த பாயசத்திற்கு சர்க்கரையோ, வெல்லமோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
பேரீச்சை சட்னி
தேவை:
பேரீச்சை - கொட்டை நீக்கியது - 5
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
துருவிய வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பேரீச்சையை நன்றாக மிக்சியில் அரைத்து, இதையும் சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
வாணலியில் வெல்லத்தை கரைத்து கொண்டு வடிகட்டி வையுங்கள்.
வாணலியை அலம்பி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து புளித்தண்ணீரை விட்டு கொதிக்க ஆரம்பித்ததும், பேரிச்சை விழுதை விட்டு, வெல்லக் கரைசலையும் விடுங்கள். கொஞ்சம் கெட்டியாக ஆரம்பித்ததும், மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வையுங்கள். சுவையான பேரீச்சை சட்னி தயார். இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.வட இந்திய சாட் உணவு வகைகளுக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற சட்னி இது.
பேரிச்சம் பழ லட்டு
தேவை:
தேங்காய்த்துருவல் – 100 கிராம்
பேரீச்சம் பழம்– 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
சர்க்கரைபவுடர் – 50 கிராம்
மில்க்மெய்ட் – 100 கிராம்
நெய் – 50 கிராம்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 6
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மில்க்மெய்ட், சர்க்கரை பவுடர், பேரீச்சை சேர்த்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி உருகியதும், தேங்காய் துருவலைச் சேர்த்து வறுக்கவும். தேங்காய் வறுபட்டு நிறம் மாறும் போது, பேரீச்சைக் கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை பாகு கெட்டிப் பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், நெய், முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து இறக்கவும். கையில் சிறிது நெய்யைத் தடவிக்கொண்டு, கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடித்தால், கம கம பேரீச்சம் பழ லட்டு ரெடி.
பேரீச்சை ஓட்ஸ் பர்பி
தேவை:
பேரீச்சை (விதை நீக்கியது), உலர் திராட்சை - தலா கால் கப்,
ஓட்ஸ் - 1 கப்,
டார்க் சாக்லேட் - 1 பார்
செய்முறை:
பேரீச்சையை பொடியாக நறுக்கி. அதனுடன் உலர் திராட்சையை கலந்துகொள்ளவும். ஓட்ஸை, கடாயில் லேசாக வறுத்துக்கொள்ளவும். டார்க் சாக்லேட்டை அடுப்பில் வைத்து, உருக்கி, இதனுடன் ஓட்ஸ், பேரீச்சை துண்டுகள் உலர் திராட்சை கலவை ஆகியவற்றை நன்கு கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து, நன்றாக செட் ஆனதும் வில்லைகள் போடவும். சுவையான சத்தான பேரீட்சை ஓட்ஸ் பர்பி ரெடி.