
1. ரவை சொஜ்ஜி அப்பம் :
தேவையானவை :
நம்பர் ஒன் ரவை - கால் கிலோ,
பேட்டை வெல்லம் - அரை கிலோ,
நெய் - 100 கிராம்,
மைதா - 300 கிராம்,
ஏலக்காய்தூள் - தேவைக்கேற்ப,
நல்லெண்ணைய் - கால் லிட்டர்
செய்முறை
முதலில் மைதா மாவை தண்ணீா் மற்றும் எண்ணெய் விட்டு நன்கு தளர பிசைந்து வைக்கவும், மூன்று மணிநேரம் பிசைந்த மாவு ஊறவேண்டும்.
வெல்லத்தை நன்கு உடைத்து பொடியாக்கி விடவும். அடுப்பில் கடாய் வைத்து நெய்விட்டு, ரவையை பொன் வறுவலாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இரண்டு டம்ளா் தண்ணீா்விட்டு வெல்லத்தைப் போட்டு நன்கு கரைந்து கொதிநிலை வரும்போது அதில் வறுத்த ரவை, ஏலப்பொடி சோ்த்து நெய் ஊற்றி கைவிடாமல் கட்டிதட்டாமல் கிளறி, கேசரி பதம் வந்ததும் இறக்கவும்.
பிசைந்த மைதா மாவை, மேலும் நன்கு பிசைந்து சிறு உருண்டையாக்கி இலையில் அப்பளம் போல தட்டி அதன் மீது ரவைகேசரியை வைத்து போளி போல தட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெயை சுற்றி விட்டு, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுத்தால் டேஸ்ட்டான சொஜ்ஜி அப்பம் ரெடி.
2. சின்ன வெங்காயம் கொத்சு
நறுக்கிய சின்ன வெங்காயம் ஒரு கப், நறுக்கிய பரங்கிக்காய், கத்தரிக்காய், தக்காளி தலா இரண்டு கப் தயாா் செய்து எண்ணைய் விட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும்.
பின்னர் குழிவான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளித்து வெடித்தபின், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கொத்தமல்லி பொடி, பெருங்காயதூள், மிளகாய் வத்தல் கிள்ளியது, சாம்பாா்பொடி, வெந்தயம் இவைகளைபோட்டு வறுத்து, ஒரு கப் புளிகரைசலை விட்டு கிளறவும். தேவைக்கேற்ப உப்பு சோ்க்கவும். வதக்கி வைத்த காய்கறி, வெங்காயம் வகைகளை போட்டு தண்ணீா் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்து வந்ததும் கொஞ்சம் வெல்லம் சோ்த்து கொத்தமல்லி, கறிவேப்பிலை, போட்டு கிளறவும். கடைசியாக கொஞ்சமாக கடலைமாவு கரைச்சல் சோ்க்கலாம். இப்போது கமகமவென வாசணை உள்ள சின்ன வெங்காய கொத்சு ரெடி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.