
அல்வா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. செய்வதற்கும் எளிது. சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும் என்பதால் இங்கு வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து எளிதாக செய்ய சில அல்வா வகைகள்.
ஆப்பிள் அல்வா
தேவை:
ஆப்பிள் - 3
சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
கார்ன்பிளவர் மாவு - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
ஏலக்காய் -8
நெய் – தேவைக்கு
செய்முறை:
ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (தோல் எடுப்பது அவரவர் விருப்பம்). ஒரு மிக்ஸியில் நறுக்கிய ஆப்பிளை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
இப்போது அடுப்பில் ஒரு அடிகனமான கடாய் வைத்து அதில் முதலில் சிறிது நெய்விட்டு ஒடித்த முந்திரியை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் அரைத்த ஆப்பிள் விழுது சேர்த்துக் கிளறவும். சற்றே நிறம் மாற ஆரம்பித்ததும் அதில் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
சர்க்கரை கரைந்ததும் சிறிது நீரில் கட்டியின்றி கரைத்த கார்ன் ஃபிளார் மாவு சேர்த்து கிளறவும். அடுப்பு மிதமான தீயில் இருப்பது நல்லது. சிறிது கெட்டியானதும் தேவையான நெய் ஊற்றி நன்றாக சேர்ந்து நெய் பிரியும் வரை கிளறி பொடித்த ஏலக்காய் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.
ரஸ்க் அல்வா
தேவை:
ரஸ்க் ( ரொட்டித் துண்டுகள்) - 6
சர்க்கரை - 1 கப்
முந்திரி திராட்சை - தலா 8
நெய் – தேவைக்கு
செய்முறை:
ரஸ்கை சிறியதாக உடைத்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் விட்டு அதில் சர்க்கரையை சேர்த்து கரைந்து கொதிக்கும் வரை கிளறவும். ஒரு பதம் வந்ததும் நைசாக அரைத்த ரஸ்க் தூளை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.
இப்போது தேவையான நெய்விட்டு நன்கு கரண்டியை சுழற்றி கை விடாமல் அடிபிடிக்காமல் கிண்டவும். அடுப்பு மிதமான தீயில் இருப்பது அவசியம். கலர் பவுடர் தேவையெனில் சேர்க்கலாம். இல்லை என்றாலும் பரவாயில்லை. இப்போது பொடித்த ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கி மேலே நெய் ஊற்றி வைக்கவும்.
சுரைக்காய் அல்வா
தேவை:
சுரைக்காய் துருவல் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
பால்கோவா- 2 கப்
டால்டா அல்லது நெய் - 50 கிராம் முந்திரிப்பருப்பு – 10
செய்முறை:
சுரைக்காய் துருவலை ஆவியில் வேகவைத்து தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக்கொள்ளவும். ஒரு அடிகனமான கடாயில் சர்க்கரை, பால்கோவா, வேகவைத்த சுரைக்காய் துருவல் மூன்றையும் சேர்த்து சிறு தீயில் வைத்து கை விடாமல் கிளறவும்.
சிறிது நேரத்தில் அல்வா பதத்தில் சுருண்டு வந்ததும் நெய் சேர்த்து மேலும் கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் எடுத்து வறுத்த முந்திரி பருப்பு தூவி வைக்கவும். பால்கோவா இல்லை என்றால் ஒரு லிட்டர் பாலில் பிரியப்பட்ட காய்கறி துருவலை வேகவைத்து கோவா பதம் வந்த பின் சர்க்கரை சேர்த்தும் மேலே கூறியபடி அல்வா செய்யலாம்.