
முடக்கத்தான் கீரை இடியாப்பம்:
முடக்கத்தான் கீரை 1 கப்
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
இடியாப்ப மாவு 2 கப்
உப்பு தேவையானது
வெந்நீர் தேவையானது
ஆய்ந்து சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை, மிளகு, சீரகம் அதற்கு தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவு, உப்பு, அரைத்த கீரை விழுது ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு வெந்நீர் விட்டு பிசையவும். இதை முறுக்கு அச்சில் இடியாப்பமாக பிழிந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும். குருமா அல்லது தேங்காய் பால் விட்டு சாப்பிட சூப்பர் டேஸ்ட்.
வெஜிடபிள் குருமா:
பீன்ஸ் 6
கேரட் 2
பச்சை பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 1
குடைமிளகாய் பாதி
வெங்காயம் 1
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
அரைத்து விட:
தேங்காய்த் துருவல் அரை கப், சோம்பு 1 ஸ்பூன், பச்சை மிளகாய் 4, எல்லா காய்கறிகளையும் சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு முதலில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்பு தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், குடைமிளகாய் போன்ற காய்கறிகளுடன் பச்சை பட்டாணியையும் சேர்த்து போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள மசாலாவையும், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்க மிகவும் ருசியான வெஜிடபிள் குருமா தயார்.
தேங்காய் பால்:
முற்றிய தேங்காய் 1
பச்சரிசி ஒரு ஸ்பூன்
தண்ணீர் 2 கப்
நாட்டு சக்கரை சிறிது
ஏலக்காய் 1
தேங்காய் பாலுக்கு இளம் தேங்காயை தேர்வு செய்யாமல் முற்றிய தேங்காயை வைத்து செய்யும் பொழுது ருசி கூடும். தேங்காயை பத்தைகளாக கீற்றிக் கொண்டு துண்டுகளாக நறுக்கி ஒரு ஸ்பூன் பச்சரிசி, ஏலக்காய் ஒன்று, ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும். மேலும் ஒரு கப் தண்ணீரை அரைத்த விழுதில் கலந்து வடிகட்டி சிறிது நாட்டுச் சர்க்கரை கலந்து இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
(குறிப்பு: முதிர்ந்த தேங்காயை துருவி அரைத்த கூழிலிருந்து எடுக்கப்படும் தேங்காய் பாலில் நாட்டு சர்க்கரையை கலந்து இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் பாலில் உள்ள பல சத்துக்கள் உடலில் சேரும். விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த தேங்காய்ப்பால் செரிமானத்திற்கும், வயிற்றுப்புண் குணமாகவும் உதவுகிறது.)