
கவுனி அரிசி பொங்கல்:
கவுனி அரிசி ஒரு கப்
தேங்காய் துண்டுகள் 2 ஸ்பூன் தேங்காய் பால் ஒரு கப்
சர்க்கரை ஒரு கப்
நெய் 4 ஸ்பூன்
ஏலக்காய் தூள் அரை ஸ்பூன்
கவுனி அரிசியை தண்ணீர்விட்டு 3 மணி நேரம் ஊறவிடவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் மூன்று விசில் விட்டு, தீயைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவும்.
நன்கு வெந்த பிறகு அதனுடன் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். பாதி அளவு நெய்யை காயவைத்து பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை நன்கு வதக்கி பொங்கலில் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஏலக்காய் தூளுடன் சேர்த்து பொங்கலில் விட்டு கிளற மிகவும் ருசியான கவுனி அரிசி பொங்கல் தயார்.
கோதுமை ரவைப் பொங்கல்:
கோதுமை ரவை ஒரு கப்
பயத்தம் பருப்பு 1/4 கப்
வெல்லம் 2 கப்
நெய் 1/4 கப்
முந்திரி பருப்பு 15
ஏலக்காய் தூள் அரை ஸ்பூன்
பால் 2 கப்
கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஒரு ஸ்பூன் நெய் விட்டு வாசனை வரும்வரை வறுத்தெடுக்கவும். பயத்தம் பருப்பை தனியாக வேகவைக்கவும். பருப்பை குழையாமல் மலர வேகவிட்டு தனியாக வைக்கவும். நெய்யை காயவைத்து தூண்டுகளாக்கிய முந்திரிகளைப் போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும்.
கோதுமை ரவையுடன் பால், தண்ணீர் சிறிது சேர்த்து கோதுமை ரவையை இரண்டு விசில் விட்டு வேகவிட்டு எடுக்கவும். நன்கு வெந்ததும் பயத்தம் பருப்பையும் சேர்த்து வெல்லத்தைப் போட்டு நன்கு கிளறி தளதளவென இளகினாற் போல் வரும்பொழுது ஏலக்காய்தூள் சேர்த்து வறுத்த முந்திரியும் போட்டு இறக்கிவிட மிகவும் ருசியான கோதுமை ரவை பொங்கல் தயார்.
பேரீச்சம்பழப் பொங்கல்:
பச்சரிசி ஒரு கப்
பயத்தம் பருப்பு கால் கப்
வெல்லம் ஒன்றரை கப்
தேன் 2 ஸ்பூன்
பேரீச்சம்பழம் 10
சுக்குப் பொடி அரை ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன்
பால் ஒரு கப்
பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். அரிசியையும், பயத்தம் பருப்பையும் கழுவி ஆறு கப் (1 கப் பால், 4கப் தண்ணீர் என்ற விகிதத்தில்) கலந்து தண்ணீர்விட்டு குக்கரில் மூன்று விசில் விட்டு நன்கு குழைவாக வெந்தெடுக்கவும். அதில் வெல்லத்தைப் பொடி செய்து கால் கப் தண்ணீர் விட்டு கரையவிட்டு கல்,மண் போக வடிகட்டவும்.
வெந்த பொங்கலில் வெல்லக் கரைசலை சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம், நெய், ஏலக்காய், சுக்குத்தூள் சேர்த்து இறக்கி 2 ஸ்பூன் தேன் கலந்துவிட மிகவும் ருசியான பேரீச்சம்பழப் பொங்கல் தயார்.