
ஜவ்வரிசி லட்டு
தேவை:
சன்ன ஜவ்வரிசி - 1 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு உடைத்தது - 2 ஸ்பூன்
நெய் - கால் கப்
செய்முறை:
ஜவ்வரிசியை ஒரு ஸ்பூன் நெய் விட்டு வறுத்து வைக்கவும். பின்னர் அதை சர்க்கரையுடன் கலந்து பொடித்துக்கொள்ளவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து, ஏலக்காய் தூள், ஜவ்வரிசி மாவு, சர்க்கரை மாவு ஆகியவற்றை அதில் போட்டு லட்டுகளாக பிரிக்கவும். சுவையான லட்டு இது செய்வதும் எளிது.
*****
ஜவ்வரிசி தயிர் பச்சடி
தேவை:
சன்ன ஜவ்வரிசி - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தயிர் - 1 கப்
தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு ஜவ்வரிசியை வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிய வாணலியில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாயை வதக்கி, தயிரில் சேர்க்கவும். இதனுடன் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ஜவ்வரிசியையும் சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி தழை தூவவும். குளு குளு ஜவ்வரிசி தயிர் பச்சடி தயார்.
*****
ஜவ்வரிசி பக்கோடா
தேவை:
ஜவ்வரிசி - 200 கிராம்,
அரிசி மாவு - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். ஜவ்வரிசியை தண்ணீர் தெளித்துப் பிசிறி வைக்கவும். நன்றாக ஊறி, மிருதுவாகும் வரை தண்ணீர் தெளித்து தெளித்து கிளறிவைக்கவும். இதனுடன் அரிசி மாவு, உப்பு, நறுக்கிய காய்கறிகளைப் போட்டு நன்றாகப் பிசையவும். இந்த மாவை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். மொறு மொறு ஜவ்வரிசி பக்கோடா தயார்.
******
ஜவ்வரிசி காரப்பணியாரம்
தேவை:
தோசை மாவு - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2,
கடுகு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்,
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - கால் கப்.
செய்முறை:
ஜவ்வரிசியை ஒருமணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.தோசை மாவில் கடுகு, நறுக்கிய பச்சைமிளகாய் தாளித்துப் போடவும். மேலும் ஜவ்வரிசி, உருளைக்கிழங்கை போட்டு கொத்தமல்லித்தழை, உப்பு தூவி கலக்கவும். குழிப்பணியாரக்கல் ஒவ்வொன்றிலும் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், ஒவ்வொரு குழியிலும் ஜவ்வரிசி கலவையை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான ஜவ்வரிசி காரப்பணியாரம் தயார்.