
சுரைக்காய் என்றாலே சிலபேருக்கு பிடிப்பதில்லை. சுரைக்காயில் எத்தனை நன்மைகள் இருக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு...
சுரைக்காய் செரிமானத்துக்கு உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், நச்சுத்தன்மைகளை நீக்கவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் சுரைக்காய் கடவுள் கொடுத்த ஒரு வரப்பிரசாதமாகும்.
சுரைக்காயில் இரணடு சுவையான அயிட்டத்தோட ரெசிபியை பார்க்கலாம்.
சுரைக்காய் பிரியாணி:
முதலில் ஒரு சிறிய (300 – 350 g) தோல் சீவி துறுவி வைத்து கொள்ளவும்.
மிக்ஸியில் ஒரு தக்காளி, மூன்று பச்சை மிளகாய், 6 – 8 பூண்டு பல், சிறிதளவு கொத்தமல்லி இழை ஆகியவற்றை போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
250 பாசுமதி அரிசியை அலசிய பிறகு 15 நிமிடத்திற்கு தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறிய பிறகு தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு துண்டு பட்டை, 3 கிராம்பு, 2 ஏலக்காய் போட்டு லேசாக வறுக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சீவி வைத்துள்ள சுரைக்காயையும் போட்டு வதக்கவும்.
சிறிது வதங்கிய பிறகு மஞ்சள் துள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலாத்தூள் மற்றும் தேவையான உப்பை சேர்த்து வதக்கவும். இப்போது பாசுமதி அரிசியை போடவும். அரிசியும் மசாலாவும் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து மூடி போட்டு அடுப்பை medium flame ல் வைத்து ஒரு விசில் வந்ததும் அணைத்து விடவும். ஓசை அடங்கிய பிறகு மெதுவாக கிளறி விடவும். உங்களுடைய சுரைக்காய் பிரியாணி தயாராகி விட்டது....
குறிப்பு: பாசுமதி அரிசி இல்லை என்றால் நீங்கள் தினமும் சாதத்திற்கு உபயோகிக்கும் பச்சை அரிசியிலும் செய்யலாம். இந்த அரிசியை ஊற வைக்க வேண்டாம். அப்படியே தண்ணீரில் களைந்து போட்டு விடலாம். ஆனால் இதற்கு தண்ணீர் சிறிது அதிகமாக ஊற்றவேண்டும் மேலும் இரண்டு விசில் விட்டு அணைக்கவும்.
சுரைக்காய் பர்தா:
½ சுரைக்காயை தோல் சீவி துறுவிக் கொள்ளவும்.
மூன்று தக்காளி மற்றும் ஒரு வெங்காயத்தை போட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு சீரகத்தை தாளிக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு துறுவி வைத்துள்ள சுரைக்காயை போடவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், சிறிதளவு கரம் மசாலாத் தூள் மற்றும் தேவையான உப்பையும் சேர்த்து கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வாணலியை மூடி வைக்கவும்.
அவ்வப்போது நன்றாக கிளறிவிடவும். 10 – 15 நிமிடங்களுக்கு வேகவிடவும். சுரைக்காய் நன்றாக வெந்து மசாலாவோடு கலந்து brown நிறப் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவவும். சுவையான சுரைக்காய் பர்தா ரெடி.
இந்த பர்தாவை சப்பாத்தி, பூரி மற்றும் பரோட்டாவோடு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சாதத்தோடும் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இரண்டு ரெசிபியையும் முயற்சி செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். சுரைக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த இரண்டையும் விரும்பி சாப்பிடுவார்கள்.