
சீஸ் ரைஸ் பால்ஸ்:
சாதம் ஒரு கப்
வெங்காயம் 1
கேரட் 1
சீஸ் துருவல் 1/2 கப்
உப்பு தேவையானது
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சாட் மசாலாத்தூள் 1/2 ஸ்பூன்
மைதா (அ) சோளமாவு 2 ஸ்பூன்
எண்ணெய்
கேரட், சீஸ் இரண்டையும் துருவிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். சாதத்தை நன்கு மசித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், மைதா மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும். கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்து வைத்த மாவை உருண்டைகளாக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் நான்கு நான்கு உருண்டைகளாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
சிறுசோள தோசை:
சின்னச் சோள மாவு 1கப்
அரிசி மாவு 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
நல்லெண்ணெய்
சின்ன வெங்காயம் 10
சோளம் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது மக்காச்சோளம் தான். ஆனால் மக்காச்சோளம் என்பது புதிதாக வந்த வீரிய ஒட்டு ரக சோளம் தான். ஆனால் பாரம்பரிய முறைப்படி சிறுசோளம் தான் தினசரி உணவாக முற்காலத்தில் எடுத்துக் கொள்ளபட்டது.
சின்னச் சோளம் 1 கிலோ வாங்கி மிஷினில் நைசாக அரைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது உடனடியாக தோசை பார்த்து சாப்பிடலாம். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோளமாவுடன் அரிசி மாவு கலந்து உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் சூடானதும் சாதாரணமாக விடும் தோசை போல மாவை நடுவில் விட்டு தேய்க்காமல் ரவா தோசைக்கு செய்வதுபோல் வெளியில் இருந்து பரவலாக மாவை விட்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைத் தூவி சுற்றிலும் எண்ணெய் விடவும். நன்கு சிவந்ததும் திருப்பிப்போட்டு இருபுறமும் மொறு மொறுப்பானதும் எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது பூண்டு சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
பிரட் மசாலா பணியாரம்:
பிரட் ஸ்லைசுகள் 10
தயிர் 1/2 கப்
வெங்காயம் 1
கோஸ் 1/4 கப்
கேரட் 1
பச்சை மிளகாய் 2
இஞ்சி சிறு துண்டு
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு
வேர்க்கடலை துண்டுகளாகி மிக்ஸியில் தயிருடன் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய கேரட், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பை சேர்த்து கடுகு பொரிந்ததும் அதனையும் மாவில் கொட்டிக் கலந்து பணியார கல்லில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை விடவும். இருபுறமும் நன்கு சிவந்ததும் எடுத்துவிட மிகவும் ருசியான பிரட் பணியாரம் தயார்.