
துவையல்கள் சற்று கெட்டியாக இருந்தால்தான் ருசியாக இருக்கும். அதற்கு சேர்க்கும் தேங்காய் முற்றியதாக இருக்கவேண்டும். என்றாலும், கொப்பரையாக இல்லாமல் பார்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை துவையல் அரைக்கும் முறை இதோ:
கறிவேப்பிலை துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல்- ஒரு கப்
கருவேப்பிலை -கைப்பிடி அளவு
உளுத்தம் பருப்பு -2 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு-1 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய்- ஐந்து
புளி- புளியங்கொட்டை அளவு
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து சிவப்பு மிளகாய் கிள்ளி போடவும். இதனுடன் தேங்காய்த் துருவல், புளி சேர்த்து மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் வதக்கி கடைசியாக அடுப்பை நிறுத்திவிட்டு கறிவேப்பிலையை போட்டு ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். இவற்றை நன்றாக ஆறவிட்டு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து துவையலாக மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
பாசிப்பருப்பு துவையல்
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - ஒரு கப்
தேங்காய் துருவல்- ஒரு கப்
வர மிளகாய்- ஆறு
உப்பு -தேவையான அளவு
செய்முறை;
வெறும் வாணலியில் பயத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்து, ரசம், வத்தல் குழம்பு மோர் சேர்க்காத கஞ்சி சாதம் போன்றவற்றோடு சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
மாங்காய் துவையல்
செய்ய தேவையான பொருட்கள்:
நறுக்கிய பச்சை மாங்காய் துண்டங்கள்- ஒரு கப்
தேங்காய்த் துருவல்- ஒரு கப்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
வரமிளகாய் -ஏழு
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
வெல்லம்- சிறிது
செய்முறை:
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் பெருங்காயம் , வர மிளகாயை பொரித்துக்கொள்ளவும். இதனுடன் மிக்ஸியில் மாங்காய்த் துண்டங்கள், தேங்காய்த் துருவல், உப்பு அனைத்தையும் சேர்த்து அரைத்து கடைசியில் சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்து அரைத்து எடுத்தால் மாங்காய்த் துவையல் ரெடி. காரம், புளிப்பு, இனிப்பு சேர்ந்த துவையல் இது. தேங்காய் சாதத்துடன் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.