
பனீர் குலோப் ஜாமூன்
தேவை:
துருவிய பனீர் – 50 கிராம், மைதா – 100 கிராம், ஆப்பசோடா – ஒரு சிட்டிகை, சர்க்கரை – 200 கிராம், எண்ணெய் – 200 கிராம்.
செய்முறை:
சர்க்கரையுடன் சிறிதளவு நீர் சேர்த்து, ஒற்றைக் கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். மைதாவுடன் பனீர், ஆப்பசோடா, சிறிதளவு நீர் சேர்த்து மிகவும் மிருதுவாக பிசைந்து , சிறிய கோலி உருண்டைகள்போல் உருட்டவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, செய்து வைத்த உருண்டை களைப் பொரித்தெடுத்து பாகில் போட்டு, கொஞ்சம் ஊறிய பின் சாப்பிடக் கொடுக்கவும். (Different types of jamun!) சுவையான பனீர் குலோப் ஜாமூன் ரெடி.
*********
நிலக்கடலை குலோப் ஜாமூன்
தேவை:
நிலக்கடலை - ஒன்றரை கப்
முந்திரி பருப்பு -15
பசும் பால் - கால் லிட்டர்
மைதா - ஒன்றரை கப்
சர்க்கரை - கால் கிலோ
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
ஏலக்காய் - 3
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கவும். பின் நிலக்கடலை மற்றும் முந்திரி இரண்டையும் பாலில் ஊறவைத்து, பிறகு ஊறிய பருப்புகளை எடுத்து விழுதாக அரைக்கவும்.
அரைக்கும்போது தண்ணீர், பால் போன்று எதுவும் சேர்க்ககூடாது. அரைத்த விழுதுடன் மைதா, பேக்கிங் சோடா, ஏலப்பொடி, சேர்த்து உருண்டை பிடிக்கும் மென்மையான பதத்திற்கு பிசையவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக பிடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். காய்ந்ததும் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர், ஏலக்காய் தட்டி போட்டு ஜீரா செய்யவும். பொரித்த உருண்டைகளை ஜீராவில் போட்டு ஊறிய பிறகு எடுத்து பரிமாறவும். சுவையான நிலக்கடலை குலோப் ஜாமூன் ரெடி.
*****
சேமியா குலோப் ஜாமுன்
தேவை:
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
பால் – 1 கப்
நெய் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – தேவையான அளவு
சேமியா – 100 கிராம்
செய்முறை:
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் சோளமாவை போட்டு, அதனுடன் 4 டீஸ்பூன் சர்க்கரை, 1 கப் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதை அடுப்பில் வைத்து, அடி பிடிக்காமல், பால் கெட்டியாக வரும் வரை நன்றாக கிண்டவேண்டும்.
இது கெட்டியாக வந்த உடன் அதில் 2 டீஸ்பூன் நெய், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் வைத்து அதில் சூடான தண்ணீர் ஊற்றி 1 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 1 நிமிடம் முடிந்த பிறகு சேமியாவை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துகொள்ள வேண்டும்.
பின்பு ஊறவைத்த சேமியா உடன் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
பின் ஒரு குழிப்பணியார கல் எடுத்துகொள்ள வேண்டும். அதில் சிறிதளவு நெய் தடவி நாம் கலந்து வைத்துள்ள சேமியாவை எல்லா குழிகளிலும் கொஞ்சமாக வைக்கவேண்டும். .
பின்னர் நாம் செய்து வைத்துள்ள கலந்துவைத்த சோள மாவை குழி பணியாரத்தில் வைக்க வேண்டும். பின் மீதமுள்ள சேமியாவை இதன் மேல் வைத்து பணியாரம்போல் செய்துகொள்ள வேண்டும்.
பின்னர் இதை அடுப்பில் வைத்து மூடி 10 நிமிடம் நன்றாக வேகவைக்க வேண்டும். பின்பு அதை திருப்பிகொள்ள வேண்டும். அதையும் 10 நிமிடம் நன்றாக வேகவைத்து பொன்னிறமாக வந்தவுடன் இறக்கி வைத்தால் சுவையான சேமியா ஜாமுன் தயார்..!
*****
நேந்திர வாழைப்பழ ஜாமூன்
தேவை:
நேந்திரம் பழம் - 3
சர்க்கரை - 250 கிராம்
ஏலக்காய் - 2
குங்குமப்பூ - சிறிது
நெய் (அ) எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
தோல் கறுத்த நன்கு கனிந்த வாழைப்பழமாக எடுத்துக் கொள்ளவும். அதை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜீரா தயார் செய்யவும். அதில் குங்குமப்பூ மற்றும் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும். கடாயில் பொரிக்க தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
நறுக்கிய வாழைப்பழத்துண்டுகளை போட்டு குறைந்த தீயில் வைத்து பொரிக்கவும். அவை நன்கு சிவந்து பொன்னிறமாக மாறியதும் எடுக்கவும். அதை ஜீராவில் போட்டு அரைமணி நேரம் ஊறியதும் எடுக்கவும். சுவையான நேந்திர வாழைப்பழ ஜாமுன் ரெடி.