கத்தரிக்காய் பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்கும் 'எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி'!

Ennai Kathirikai
Ennai Kathirikai
Published on

காய்கறிகளில் பெரும்பாலும் மலிவு விலை என்றால் கத்தரிக்காய் தான் முதல் இடத்தில் இருக்கும். பொதுவாக விசேஷங்களில் பருப்பு சாம்பாரில் சேர்க்கும் காய் கத்திரிக்காயாகத்தான் இருக்கும். ஆனால் கத்திரிக்காய் என்றாலே தூரம் ஓடுபவர்களும் உண்டு. குழந்தைகள் அதிலிருக்கும் விதைகளை விரும்புவதில்லை என்றால் பெரியவர்கள் அடிக்கடி கத்திரிக்காயா என சலிப்பார்கள்.

ஆனால் கத்திரிக்காய் தரும் உடல் நல நன்மைகளை தெரிந்து கொண்டால் அதை வேண்டாம் என ஒதுக்கவே மாட்டீர்கள். என்ன நன்மை தெரியுமா?

அதன் ஊதா நிற தோலில் காணப்படும் நாசுனின் (Nasunin) என்ற ஆக்ஸிஜனேற்றி, இரத்த நாளங்களை சேதத்திலிருந்து பாதுகாத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை எளிதாக்கவும் உதவுகிறது. புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கத்திரிக்காய்க்கு உண்டு.

இத்தகைய நன்மைகள் கொண்ட கத்திரிக்காயில் சுவையான ரெசிபி செய்யலாமா?

எண்ணெய் கத்திரிக்காய் (Ennai Kathirikai) கிரேவி

தேவையானவை:

பிஞ்சு கத்திரிக்காய் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 20

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 10 பற்கள்

இஞ்சி - சிறு துண்டு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - தேவைக்கு ஏற்ப

தேங்காய் - 1/4 கப் ( துருவியது)

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

புளி - தேவைக்கு ஏற்ப

கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவைக்கு

இதையும் படியுங்கள்:
வெண்டைக்காய் முற்றிவிட்டால்? தோசை மாவு புளித்துவிட்டால்? சமையல் சந்தேகங்கள்; ஆலோசனைகள்!
Ennai Kathirikai

செய்முறை:

கத்திரிக்காய்களை நன்கு கழுவி (முழுதாக) நான்காக பிளந்து கொள்ளவும் நடுவில் புழுக்கள் இருக்கிறதா என பார்த்து அகற்றவும். ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கத்திரிக்காய்களை அதில் போட்டு நிறம் மாறி சற்று வேகும் வரை நன்கு வதக்கி தனியே வைக்கவும்.

அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடலைப் பருப்பு, உளுந்து போட்டு சிவந்ததும் உரித்த சின்ன வெங்காயம், அரிந்த பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி,தேங்காய் போட்டு நன்கு வதக்கி அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து மிக்சியில் இட்டு நன்கு நைசாக அரைக்கவும்.

இதையும் படியுங்கள்:
மஞ்சள் பூசணிக்காய் கூட்டு: சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்!
Ennai Kathirikai

மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு , சீரகம், கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு சிறிது நீர் ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க விட்டு புளிக்கரைசல் சேர்க்கவும். மசாலா கெட்டியானதும் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காய்களை போட்டு சில நிமிடங்கள் மட்டும் வேகவைத்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

இந்த எண்ணெய் கத்திரிக்காய் சூடான சோற்றுக்கு சூப்பராக இருக்கும். வேண்டாம் என்பவர்களும் இன்னும் வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com