
சோறு சூடாக இருந்தால் அதற்கு சரியான ருசியில் ரசம் இருந்தால் போதும் என்பார்கள் சிலர். எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் இறுதியில் ரசம் ஊற்றி சாப்பிட்டால் மட்டுமே வயிற்றுக்கும் மனதிற்கும் நிறைவாக இருக்கும். அந்த வகையில் எளிதாக வைக்கும் சில ரச வகைகளை இங்கு பார்ப்போம்.
எலுமிச்சம் பழ ரசம்
தேவை:
தக்காளி- 2
எலுமிச்சம் பழம்- 1
கொத்தமல்லித்தழை தழை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
பூண்டு, 3 பல்
வற்றல்- 1
உப்பு - தேவைக்கு
செய்முறை:
அரை லிட்டர் தண்ணீரில் தக்காளி பழத்தை பிசைந்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு தட்டி போட்டு கொத்தமல்லி இலையை கிள்ளி போட்டு ஒரு கரண்டி எண்ணெயில் கடுகு, வற்றல் தாளித்து கொட்டி இறக்கவும் .தேவையான புளிப்புக்கு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு உப்பு சேர்க்கவும்.
பொரித்த ரசம்
தேவைக்கு;
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி -2
பச்சை மிளகாய்- 2
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து பெருங்காயம்- சிறிது
மிளகு - 1 டீஸ்பூன்
வற்றல் - 2
தனியா - 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை;
கடலைப்பருப்பு, தனியா, வற்றல், மிளகு எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும். தேங்காய் துருவலையும் வதக்கி கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும். அரை லிட்டர் நீரில் புளியைக் கரைத்து அதில் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் போட்டு அத்துடன் பொடித்த ரசப்பொடியையும் தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி தேவையான உப்பு சேர்த்து கொதித்து வரும்போது மல்லித்தழை கிள்ளிப்போட்டு இறக்கவும்.
வேப்பம்பூ ரசம்
தேவை;
வேப்பம்பூ - 1 டீஸ்பூன்
புளி- எலுமிச்சை அளவு
தக்காளி- 2
வற்றல் - 1
துவரம் பருப்பு- 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம்- சிறிது கொத்தமல்லித்தழை - தேவைக்கு கருவேப்பிலை -தேவைக்கு
எண்ணெய் - தாளிக்க
செய்முறை;
புளியையும் தக்காளியும் தண்ணீரில் பிசைந்து கரைசலாக்கி மற்றவற்றை பொடி செய்து போட்டு ஒரு தேக்கரண்டி எண்ணெயில் கடுகு, வற்றல் தாளித்துக் கொட்டி வேப்பம்பூவை வதக்கி போட்டு கொதிக்க வைக்கவும். இறக்கும்போது கொத்தமல்லித்தழை, கருவேப்பிலை போட்டு உப்பு போட்டு இறக்கவும். இந்த வேப்பம்பூ ரசம் நலனுக்கு நல்லது.
மிளகு ரசம்
தேவை;
புளி- எலுமிச்சம் பழ அளவு
தக்காளி - 2
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
சீரகம்- 1/2 டீஸ்பூன்
மிளகு- 1 டீஸ்பூன்
பூண்டு- 4
வற்றல் -நான்கு
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
செய்முறை;
அரை லிட்டர் தண்ணீரில் புளியை போட்டுக் கரைத்து அத்துடன் தக்காளியையும் நசுக்கி போடவும். பூண்டு தட்டி போடவும். துவரம்பருப்பு மிளகு, சீரகத்தை பொடி செய்து வைக்கவும். வாணலில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, வற்றல், காயம், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி அதில் தட்டி வைத்திருக்கும் சாமான்களை போட்டு இரண்டு கிளறு கிளறி தக்காளி கலந்து புளித்தண்ணீரையும் சேர்த்து கொதித்து வரும்போது கொத்தமல்லித்தழை கிள்ளி போட்டு தேவையான உப்பு போட்டு பரிமாறவும்.