
திருக்கார்த்திகை நைவேத்தியத்திற்கு மிளகு அடையும், வெல்லடையும் செய்து அதனையே இரவு பலகாரமாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. கார்த்திகை தீபத்தன்று விரதம் இருக்கும் அனைவரும் இரவு நைவேத்தியம் செய்யும் இந்த அடைகளை உண்டு விரதத்தை முடிப்பார்கள்.
கார்த்திகை வெல்ல அடை:
அரிசி பச்சரிசி 2 கப்
துவரம் பருப்பு 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு 4 ஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை
வெல்லம் 1 கப்
ஏலக்காய் 4
தேங்காய் துருவல்1/2 கப் அ பொடியாக நறுக்கிய தேங்காய் பல்
நெய் தேவையான அளவு
அரிசி மற்றும் பருப்புகளை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவிடவும். அரிசியை களைந்து தண்ணீரை வடித்து விட்டு அரைக்கவும். கடைசியாக பொடித்த வெல்லத்தையும், தேங்காய் துருவலையும், ஏலக்காயையும் சேர்த்து அரைக்கவும். விழுதாக அரைக்காமல் சிறிது கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.
இத்துடன் ருசியைக் கூட்ட ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். பருப்புகளையும் களைந்து கொரகொரப்பாக ஒன்று இரண்டு பருப்புகள் தெரியும்படி அரைத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து விடவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்கு சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு இரண்டு கரண்டி மாவை விட்டு சிறிது தடிமனாக பரப்பி நெய் விட்டு வார்க்கவும். ஐந்தாறு இடங்களில் சிறு துளைகள் போட்டு நெய்யை அடையின் ஓரங்களிலும், நடுவிலும், துளைகளிலும் விட்டு நன்கு வெந்ததும் திருப்பிப் போடவும். இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்துவிட மிகவும் ருசியான வெல்லடை தயார்.
மிளகு அடை:
அரிசி 2 கப்
துவரம் பருப்பு 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு 4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 கப்
மிளகு 2 ஸ்பூன்
மிளகாய் 2
தேங்காய்த் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை சிறிது
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்றுசேர்த்தும் 2 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு நன்கு களைந்து நீரை வடித்து விட்டு முதலில் அரிசியை உப்பு, மிளகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். பருப்புகளை விழுதாக அரைக்காமல் கொரகொரப்பாக ஒன்றிரண்டு பருப்புகள் தெரியும்படி அரைக்கவும். கடைசியாக தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்தெடுக்கவும். அரைத்த அரிசி, பருப்பு மாவுகளை ஒன்றாகக் கலந்து கெட்டியான அடைமாவு பதத்தில் கரைக்கவும். தோசை மாவு பதத்தில் இல்லாமல் சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு இரண்டு கரண்டி மாவை விட்டு பரப்பி ஐந்தாறு இடங்களில் தோசை வார்க்கும் கரண்டியால் துளை போடவும். துளை போடுவதன் காரணம் அடை நன்கு வெந்து, துளையிட்ட இடங்களில் மொறுமொறுப்பு கூடி சுவையாக இருக்கும். அடையை சுற்றிலும், மையத்திலும், துளை இருக்கும் இடங்களிலும் நல்லெண்ணெய்விட்டு ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு இரண்டு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து விடவும். இதற்கு வெல்லம், வெண்ணெய் சிறந்த பக்க வாத்தியமாக இருக்கும்.