
கல்யாணம் என்றாலும் வீட்டு சமையல் என்றாலும் கை கொடுப்பது விலை மலிவான கத்திரிக்காய்தான். கத்தரிக்காயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் பல்வேறு உடல் நல பாதிப்புகளையும் தடுக்க உதவுகிறது. குறிப்பாக புற்றுநோய் மற்றும் இதயநோய் போன்ற நீண்ட கால பாதிப்புகள் வராமல் தடுக்கும் என்கின்றனர். இந்த கத்தரிக்காயில் சில ரெசிபிகளை இங்கே பார்ப்போமா...
கத்திரிக்காய் உருளை வதக்கல்
தேவை:
கத்தரிக்காய்- 4
உருளைக்கிழங்கு - 2
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி- சிறு துண்டு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு - தாளிக்க
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கருவேப்பிலை - தாளிக்க
நல்லெண்ணெய் - இரண்டு ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை:
தக்காளியையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். கத்திரிக்காய் நான்காக வகுந்துது சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக்கொள்ளவும். உருளைக்கிழங்கு தோல் சீவி கத்திரிக்காய் விட சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் . கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்து தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி பின் வெங்காயம் சேர்த்து வதங்கியுடன் தக்காளி சேர்த்து வதக்கி அரிந்து வைத்துள்ள கத்தரிக்காய் போட்டு வதக்கி சாம்பார் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நீர் தெளித்து சில நிமிடங்கள் மூடி மிதமான தீயில் வைக்கவும்.
தண்ணீர் சுண்டி தளர இருக்கும்போது எடுத்து சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் கத்தரிக்காயும் உருளைக்கிழங்கும் சேர்ந்த ருசி சூப்பராக அள்ளும்.
கத்திரிக்காய் தொக்கு
தேவை:
பிஞ்சு கத்திரிக்காய் - 1/2 கிலோ
பூண்டு- 10 பற்கள்
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்கள் - 8
சின்ன வெங்காயம் - 10
சீரகம் , கடுகு- தலா 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது
உப்பு- தேவைக்கு
செய்முறை:
முதலில் பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை இடித்து அல்லது மிக்சியில் ஒரு சுழற்று சுற்றி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிஞ்சுக்கத்திரிக்காயை இரண்டாகப் பிளந்து நறுக்கிக் கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் பச்சை மிளகாய் கலவை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக சிவக்கும் வரை வதக்கவேண்டும்.
இத்துடன் கத்திரிக்காய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிதமான தீயில் மூடி மிதமான தீயில் மூடி வைக்கவும். கத்திரிக்காய் வேக சிறிது நீர் தெளிக்கலாம். அதிகம் வேண்டாம். கத்தரிக்காய் நன்கு வெந்ததும் மத்து கொண்டு நன்கு கடைந்து மேலே நறுக்கிய கொத்தமல்லித்தழை போட்டு ரசிக்கலாம். மத்து இல்லை எனில் மிக்சியில் ஒரு சுழற்றில் எடுக்கலாம். கத்திரிக்காய் தொக்கு சாதம், சப்பாத்திக்கு ஏற்ற காம்பினேஷன்.