
பீட்ரூட்டைத் துருவி ஆவியில் வேகவைத்து கெட்டியான தயிரில் போடவும். மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து பீட்ரூட் கலவையில் கலந்தால் புதுவித ருசியில் உள்ள இந்த பச்சடி சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.
தேங்காய் சட்னியுடன் புளிக்காத தயிர், காராபூந்தி, சீரகப்பொடி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கலக்கினால் சுவையான பச்சடி தயார்.
முளைக்கீரையை உப்பு போட்டு வேகவைத்து, தேங்காய், பச்சை மிளகாய் அரைத்துக் கலந்து, இரண்டு கரண்டி புளிக்காத தயிர் விட்டு கடுகு தாளித்தால் கீரைப்பச்சடி அமிர்தம்.
தயிர் பச்சடி செய்யும்போது தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் வாசனையும், சுவையும் அசத்தும்.
இரண்டு டீஸ்பூன் புழுங்கல் அரிசியுடன் சிறிது தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுத்துச்சேர்த்து, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து தயிரில் கலந்து கடுகு தாளித்துக் கொட்டினால் வித்தியாசமான சுவையில் தயிர் பச்சடி தயார்.
சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம் பழம்,உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் சூப்பர் சுவையில் பச்சடி ரெடி.
உருளைக்கிழங்கை குக்கரில் நன்கு வேகவைத்து, தோலுரித்து, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து ஃப்ரெஷ் தயிர் சேர்த்துக்கலக்கினால் ருசி மிகுந்த, சுவையான பச்சடி தயார்.
தயிர் பச்சடியில் வெங்காயத்துக்கு பதில் கோவைக்காயை சேர்த்தால் பச்சடி புதுச்சுவையுடன் இருக்கும்.
கொத்துமல்லி அதிகமாகவும், மலிவாகவும் கிடைக்கும் நாட்களில்,கொத்துமல்லித்தழையை உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்து வடையாக தட்டி வெயிலில் காயவைத்து வடகமாக செய்து கொள்ளுங்கள். இந்த வடகத்தை சேர்த்து தயிர் பச்சடி செய்தால் ருசி அருமையாக இருக்கும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிப் பிறகு சிப்ஸ் துருவலில் துருவினால் மிக மெல்லியதாகவிழும். பிறகு வழக்கம் போல் தயிர், உப்பு சேர்த்து சுவையான தயிர் பச்சடி செய்யலாம்.
ஒரு பிடி கொண்டைக்கடலையை சிவக்க வறுத்து, முதல் நாளே தண்ணீரில் ஊறவிடவும். மறுநாள் கொஞ்சம் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூளைத் தாளித்து, கொண்டைக்கடலையுடன் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து, கடைந்த தயிருடன் கலந்து உப்பு சேர்த்தால் தயிர் பச்சடி பிரமாதமாக இருக்கும்.
வெள்ளைப் பூசணிக்காயைத் துருவி கொஞ்சம் உப்பு சேர்த்து, தேவையான அளவு பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை சேர்த்து கறி வேப்பிலை, கடுகு தாளித்து, தயிரில் கலந்து தயிர் பச்சடியாக செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.