
வட இந்தியா, தென்னிந்தியா என்று இல்லாமல் இந்தியா முழுவதும் சமையலில் தவிர்க்க முடியாத அங்கமாக பன்னீரில் சமைத்த உணவுகள் மாறிவிட்டன. பண்டிகை, விருந்து இரண்டிலும் பன்னீர் இல்லாமல் இல்லை என்ற அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த வகையில் பன்னீரை வாங்கும் போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பன்னீர் உருவாக்கும் விதம்
பாலுடன் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற புளிப்பு பொருட்களை சேர்த்து திரிய வைத்து அதன் பிறகு அதிலிருந்து தண்ணீரை பிடித்து எடுத்தால் பன்னீர் கிடைத்துவிடும். வீட்டிலேயே செய்யக்கூடிய பன்னீரை கடைகளில் வாங்கும்போது பெரிய அளவில் தயாரிப்பு முறை இருக்கும்.
காலாவதி தேதி
பன்னீரை வாங்கும்போது அதனுடைய பாக்கெட்டின் மேல் அச்சிடப்பட்டிருக்கும் தயாரிப்பு தேதியையும்,காலாவதி தேதியையும் கவனமாக பார்த்து வாங்க வேண்டும் .காலாவதி தேதி நெருங்கிய நிலையில் உள்ள பன்னீரை வாங்காமல் புதிதாக தயாரிக்கப்பட்ட பன்னீரை வாங்குவதே சிறந்தது.
பேக்கிங்
காற்றோட்டம் உள்ள பாக்கெட்டுகளில் கிருமிகள் எளிதில் வளர வாய்ப்புள்ளதால் பன்னீர் வாங்கும் போது அதனுடைய பாக்கெட் கிழிந்து இருக்கிறதா, உடைந்திருக்கிறதா அல்லது காற்று புகுந்து இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும்.vacuum sealed செய்யப்பட்ட பாக்கெட்டுகள்தான் பாதுகாப்பானவை.
நிறம் மற்றும் வாசனை
பன்னீர் வெள்ளை அல்லது சற்று மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கும். நிறம் மாறி பழுப்பு நிறமாகவோ ,பச்சை நிறமாகவோ, இருந்தால் அது கெட்டுப்போக ஆரம்பித்த பன்னீராக இருக்கும் என்பதால் அதனை வாங்குவதை தவிர்க்க வேண்டும் . பன்னீரில் இயற்கையாக லேசான பால் வாசனை மட்டுமே இருக்கும் என்பதால் புளித்த வாடையோ, கசந்த வாடையோ வந்தால் அதனை வாங்குவதை தவிர்த்து விடவேண்டும்.
தொட்டுப் பார்க்க வேண்டும்
பன்னீர் இறுக்கமாகவோ மென்மையாகவோ இல்லாமல் தொட்டுப் பார்க்கும்போது வழுவழுப்பாகவோ, பிசுபிசுப்பாகவோ இருந்தால் அது கெட்டுப் போன பன்னீராக இருக்கும் என்பதால் அதனை வாங்க வேண்டாம்.
சேமிக்கும் முறை
பன்னீரை எப்பொழுதும் குளிர்சாதன பெட்டியில் அல்லது குளிர்ந்த இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் .அப்படி இல்லாமல் வெப்பமான சூழலில் வைக்கப்பட்டு இருக்கும் பன்னீர் கெட்டுப்போக அதிகம் வாய்ப்பு இருப்பதால் அதனை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
பிராண்ட்
தரக்கட்டுப்பாட்டை பராமரிக்கும் பிராண்டுகள் நம்பகமானவையாக இருப்பதால் அத்தகைய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் பன்னீரை வாங்குவதே சிறந்தது .உள்ளூர் கடைகளில் விற்கப்படும் புதிய நம்பகமில்லாத பிராண்டுகள் உள்ள பன்னீரின் உற்பத்தி மற்றும் சேமிப்பு தன்மை குறித்து நமக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் அதனை தவிர்த்து விட வேண்டும்.
பன்னீர் பால் பொருளாக இருப்பதால் தயாரிப்பு முறையும் சேமிப்பு முறையும் சரியாக கையாளாத பன்னீராக இருந்தால் அதில் கிருமிகள் ஏற்பட்டு வயிற்று உபாதைகளுக்கு வழி வகுக்கும் என்பதால் மேற்கூறிய முறைகளை கையாண்டு பன்னீர் வாங்கி உபயோகியுங்கள்.