
சமையல் கலையினைக் கற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த பல்வேறு வகையான கத்திகளை, இன்றையப் பெண்கள் தங்களது சமையலறையில் வாங்கி வைத்திருக்கின்றனர். சமையலறைப் பயன்பாட்டுக் கத்திகளில் 14 வகையான கத்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
1. சமையல்காரர் கத்தி (Chef’s Knife)
உணவை வெட்டுவதற்கும், துண்டுகளாக்குவதற்கும், நறுக்குவதற்கும் பயன்படுத்தப்படும் பல்துறை சமையலறைக் கத்தியான இது 'பிரெஞ்ச் கத்தி' என்று வேறு பெயராலும் குறிப்பிடப்படுகிறது. கூர்மையான முனை, சாய்வான வளைவுடன் கூடிய கவனிக்கத்தக்க விளிம்பு மற்றும் அகலமான, கனமான கத்தியாக இருக்கிறது. பெரும்பான்மையாக, 15 முதல் 25 செ.மீ (6 முதல் 10 அங்குலம்) வரையிலான அளவுகளில் இவை கிடைக்கின்றன.
இந்தக் கத்தியினைக் கொண்டு, பல்வேறு உணவுகளைத் துண்டுகளாக வெட்டுதல், துண்டுகளாக்குதல் மற்றும் நறுக்குதல் பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் பிற உணவுகளைத் துண்டித்தல் போன்ற பணிகளைச் செய்ய முடிகிறது.
2. சீர்படுத்தும் கத்தி (Paring Knife)
சமையலறையில் துல்லியமான வெட்டும் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிற இக்கத்தியானது மெல்லிய பிளேடுடன் கூடியதாகவும், சிறிது கூர்மையானதாக இருக்கிறது. இக்கத்திகள் சிறியதாகவும், கச்சிதமாகவும் இருப்பதால், இக்கத்திகளைக் கையாள எளிதாக இருக்கிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தோல் உரிக்கவும், அவற்றை ஒழுங்கமைக்கவும், வடிவமைக்கவும் ஏற்றதாக இருக்கிறது. இறைச்சியிலிருந்து அதிகப்படியான கொழுப்பு மற்றும் தோலை அகற்றவும் இக்கத்தி பயன்படுகிறது.
3. ரொட்டி கத்தி (Bread Knife)
ரொட்டி கத்தி என்பது அனைத்து வகையான ரொட்டி, மென்மையான பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் சமைத்த இறைச்சிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ரம்பம் போன்ற விளிம்பு கொண்ட சமையலறைக் கத்தி ஆகும். மொறுமொறுப்பான ரொட்டிகளை நசுக்காமல் துண்டுகளாக வெட்டவும், தக்காளி, ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற மென்மையான பழங்கள் மற்றும் காய்கறிகளை வெட்டுவதற்கும் பயன்படுகிறது.
4. எலும்புக் கத்தி (Boning Knife)
இறைச்சி மற்றும் மீனில் இருந்து எலும்புகளை அகற்றுவதற்கு இக்கத்தி பயன்படுத்தப்படுகிறது. குறுகிய, நெகிழ்வான கத்தியாக இருப்பதால் எலும்புகளைச் சுற்றித் துல்லியமாக வெட்ட அனுமதிக்கிறது. மேலும் எலும்பிலிருந்து இறைச்சியை துல்லியமாகப் பிரித்தெடுக்கப் பயன்படுகிறது.
5. சாண்டோகு கத்தி (Santoku Knife)
சாண்டோகு கத்தி வெட்டுவதற்கும், துண்டுகளாக்குவதற்கும் சிறந்தது. இவ்வகைக் கத்திகள் ஜப்பானிய உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இறைச்சி மற்றும் காய்கறிகளைக் காகித அளவிலான மெல்லிய துண்டுகளை உருவாக்கவும் இவ்வகைக் கத்தி பயன்படுத்தப்படுகிறது.
6. பயன்பாட்டுக் கத்தி (Utility Knife)
பொதுவான பணிகளுக்கான, நடுத்தர அளவிலான இக்கத்தி, சமையல்காரரின் கத்தியை விடச் சிறியது. பல்வேறு சமையலறைப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இடையீட்டு ரொட்டி (சாண்ட்விச்), பாணினிகளை வெட்டுவதற்கும், சிறிய பழங்கள் மற்றும் காய்கறிகளை நறுக்குதல். இறைச்சியிலிருந்து அதிகப்படியான கொழுப்பு மற்றும் தசை நார்களை வெட்டி நீக்குதல், பாலாடைக்கட்டிகளை வெட்டுதல், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைப் பழங்களை உரித்து பிரித்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
7. கிளீவர் கத்தி (Cleaver Knife)
அகலமான, செவ்வக வடிவத்திலான இக்கத்தி எலும்புகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பெரிய இறைச்சித் துண்டுகளை உடைக்கத் தேவையான வலிமை இதில் இருக்கிறது. எலும்புகள் மற்றும் கடினமான இறைச்சித் துண்டுகளை வெட்டுதல், பூசணிக்காய் போன்ற பெரிய காய்கறிகளை நறுக்குதல் போன்ற பணிகளுக்குப் பயன்படுகிறது.
8. பில்லட் கத்தி (Fillet Knife)
இக்கத்தி மெல்லிய, நெகிழ்வான பிளேடு உள்ளது. துல்லியமான வெட்டுக்களையும், எலும்புகளை எளிதாக அகற்றுவதையும் அனுமதிக்கிறது. மீன்கள் மற்றும் கடல் உணவு பொருட்களைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்வதற்கும், அதனைத் தேவைப்படும் வகையில் நறுக்கிக் கொள்வதற்கும் பயன்படுகிறது.
9. இறைச்சி வெட்டுநர் கத்தி (Butcher Knife)
இக்கத்தி கடினமான வெட்டுக்களைக் கையாளக்கூடிய தடிமனான, வலுவானதாக இருக்கிறது. பெரிய இறைச்சித் துண்டுகளை வெட்டுவதற்கும், உடைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எலும்புகள் மற்றும் குருத்தெலும்பு வழியாக வெட்டுதல். இறைச்சியை வெட்டிப் பிரித்தல், சமையலுக்கு முதன்மையான துண்டுகளைத் தயாரித்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுகிறது.
10. செதுக்கும் கத்தி (Carving Knife)
இக்கத்தி நீண்ட மற்றும் குறுகிய முனையைக் கொண்டிருக்கிறது. இது மெல்லிய, சீரான துண்டுகளாக்கப் பயன்படுகிறது. வான்கோழி, கோழி, மாட்டிறைச்சி போன்ற வறுத்த இறைச்சிகளை நறுக்குதல், பெரிய இறைச்சித் துண்டுகளைச் செதுக்குதல், சமைத்த இறைச்சியின் மெல்லிய, சீரான துண்டுகளை உருவாக்குதல், முலாம்பழம், பூசணிக்காய் போன்ற பெரிய பழங்களை நறுக்குதல் போன்ற பணிகளுக்குப் பயன்படுகிறது.
11. நகிரி கத்தி (Nakiri Knife)
சுத்தமான வெட்டுக்களுக்குப் பயன்படும் ஒரு ஜப்பானிய காய்கறிக் கத்தியான இது, காய்கறிகளை நறுக்குவதற்கு ஏற்ற நேரான, செவ்வக வடிவத்தைக் கொண்டிருக்கிறது. காய்கறிகளை நறுக்குதல், வெட்டுதல் மற்றும் துண்டுகளாக்குதல், காய்கறிகளிலிருந்து மெல்லிய, சீரான துண்டுகளை உருவாக்குதல் போன்ற பணிகளுக்குப் பயன்படுகிறது.
12. தோலுரிப்புக் கத்தி (Peeler)
இது ஒரு கூர்மையான கத்தியாகும். பழங்கள் மற்றும் காய்கறிகளை உரிக்க, குறிப்பாக, சதையை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் தோலை எளிதாக நீக்குகிறது. உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பிற வேர்க்காய்கறிகளை உரிக்கவும். ஆப்பிள், பேரிக்காய், பீச் போன்ற பழங்களிலிருந்து மேற்தோலை நீக்குதல் போன்ற பணிகளுக்குப் பயன்படுகிறது.
13. துருவுக் கத்தி (Grater)
இக்கத்தி கரடு முரடான பொருட்களைத் துருவப் பயன்படுகிறது. பாலாடைக்கட்டிகள், காய்கறிகள் போன்றவற்றைத் துருவப் பயன்படுகிறது. கேரட் மற்றும் சுரைக்காய் போன்ற காய்கறிகளை நறுக்குதல், மெல்லிய அல்லது கரடு முரடான துருவல் உருவாக்குதல் போன்ற பணிகளுக்குப் பயன்படுகிறது.
14. மாண்டோலின் (Mandoline)
இது ஒரே சீரான அளவில் துண்டுகளை உருவாக்க அனுமதிக்கும், சரி செய்யக்கூடிய பிளேட்டைக் கொண்டிருக்கிறது. இது காய்கறிகளை மெல்லியதாகவும் சீரானதாகவும் வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிகள், உருளைக்கிழங்கு, முள்ளங்கி போன்ற காய்கறிகளைச் சீராக நறுக்குதல், சாலட்டுகள் தயாரித்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுகிறது.
சமையல் பணிகளைச் செய்யும் சமையல்காரர்கள் மற்றும் பெண்மணிகளுக்கு இந்த 14 கத்திகள் தேவையான ஒன்றாகும்.