நாம் சமைக்கும் உணவில் உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவைகள் சரியான அளவில் இருந்தால் தான் சுவையான உணவு கிடைக்கும். நம் நாக்கிற்கு சுவை என்பது மிகவும் முக்கியமாகும். இனிப்பு சுவை அனைவராலும் விரும்பப்படும் சுவையாகும். இதுவே, கசப்பு சுவையை பெரும்பாலும் யாரும் விரும்பமாட்டார்கள். இருப்பினும் கசப்பில் தான் மருத்துவ குணம் நிறைய இருக்கிறது என்று கூறுவார்கள். எனவே, சுவை என்பது நம் அன்றாட வாழ்விற்கு தேவை. இந்த அறுசுவையும் நமக்கு எவ்வாறு பயன் தருகிறது என்பதைப் பற்றி தெளிவாக இந்தப் பதிவில் காண்போம்.
மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இனிப்பாகும். நம் உடலுக்கு உடனடியாக உற்சாகத்தை தரக்கூடிய சுவை இதுவாகும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இருப்பினும் இதை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல் சோர்வு, உடல் எடை அதிகரித்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். அரிசி, கோதுமை போன்ற தானியங்களிலும், கரும்பு வகையிலும், உருளை போன்ற கிழங்கு வகைகளிலும், பழங்களிலும் இனிப்பு சுவை அதிக அளவு காணப்படுகிறது.
புளிப்புச் சுவை உணவிற்கு மேலும் சுவைக்கூட்டக்கூடியதாகும். இது பசி உணர்வை தூண்டும். நம் உடலில் உள்ள உணர்வு நரம்புகளை வலுப்பெற செய்யும். இதை அதிகமாக எடுத்துக் கொண்டால், நெஞ்செரிச்சல், பற்களில் பாதிப்பு ஏற்படும். அரிப்பு போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்பு சுவை அதிகம் காணப்படுகிறது.
துவர்ப்பு சுவையானது உடலில் உள்ள இரத்தத்தை பெருக்க உதவுகிறது. உடலில் அதிகப்படியாக வரும் வியர்வையை கட்டுப்படுத்துகிறது. ரத்தப்போக்கை குறைக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கை சரிசெய்ய வல்லது. வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய், வெற்றிலை பாக்கு போன்றவற்றில் துவர்ப்பு சுவை அதிகம் காணப்படுகிறது.
கார்ப்பு சுவை பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல் உணவு செரிமானம் ஆவதற்கும் பெரிதாக உதவுகிறது. அதிகப்படியான காரத்தை உணவில் சேர்த்துக் கொள்வது குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பை உண்டாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை இருக்கிறது.
உணவில் கட்டாயம் தவிர்க்க முடியாத சுவை தான் உவர்ப்பு சுவை. இது உமிழ்நீரைச் சுரக்க செய்கிறது. உவர்ப்புசுவை மற்ற சுவைகளை சமன் செய்ய உதவுகிறது. இதை அதிகம் எடுத்துக்கொண்டால், தோல் தளர்வினை உண்டாக்கி தோல்களை சுருங்கிப் போகச் செய்யும். உப்பு, கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றில் உவர்ப்பு சுவை அதிகம் காணப்படுகிறது.
கசப்பு சுவை பலராலும் அதிகம் வெறுக்கப்படும் சுவையாகும். இருந்தாலும் உடலுக்கு அதிகம் நன்மை பயக்கும் சுவையாகும். உடலில் ஏற்படும் காய்ச்சலைத் தணிக்கிறது. ரத்தச் சுத்தகரிப்பை செய்கிறது. நம் உடலுக்கு வேண்டாத கிருமிகளை அழிக்கிறது. பாகற்காய், சுண்டைக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ போன்றவற்றில் கசப்பு சுவை மிகுதியாக உள்ளது.
நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் அறுசுவையும் உணவிற்கு சுவைக்கூட்டுவது மட்டுமில்லாமல் நமக்கு ஆரோக்கிய பலன்களையும் வாரி வழங்குகிறது.