
நம்முடன் வாழ்ந்த முன்னோர்கள், உறவினர்கள், நண்பர்கள் இறந்துவிட்டால் அவர்களின் நினைவாக சில பொருட்களை எடுத்து வைத்திருப்போம். அது உடை, ஆபரணம், வாகனம் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இறந்தவர்களின் எந்த பொருளை பயன்படுத்தினால் நமக்கு அவர்களின் ஆசிக் கிடைக்கும். இறந்தவர்களின் எந்த பொருளை நாம் பயன்படுத்தக்கூடாது என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாகவே மற்றவர்கள் பயன்படுத்திய பொருளை நாம் பயன்படுத்தும் போது அதில் அவர்களின் நினைவுகளும், அதிர்வுகளும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த பொருளை பார்க்கும் போது அவர்கள் பற்றிய நினைவுகள் நமக்கு வரும். உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருட்களிலும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஆற்றல் நிறைந்திருக்கும். எதிர்மறையான ஆற்றல் இருந்தால், அது நமக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுக்கும். நேர்மறையான ஆற்றல் முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திய பொருளை நாம் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதீத எச்சரிககையாக இருக்க வேண்டும். சாஸ்திரத்தில் இறந்தவர்கள் பயன்படுத்திய சில பொருட்களை கட்டாயம் நாம் பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார்கள்.
இறந்தவர்கள் பயன்படுத்திய ஷூ, செருப்பு போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. இதனால் ஆரோக்கிய சம்மந்தமான பல்வேறு விதமான நோய்கள் வரலாம். சாஸ்திரத்தில் மற்றவர்கள் பயன்படுத்திய காலணிகளை பயன்படுத்தும் போது துரதிஷ்டம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
வீட்டில் உள்ள வயது முதிர்ந்தவர்கள் இறந்துவிட்டால், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தை ஓட்டினால் அந்த பெரியவர்களின் ஆசிர்வாதம் அந்த வாகனத்தில் இருக்கும். இதுவே சிறுவயதிலேயே இறந்தவர்களின் வாகனத்தை எடுத்து பயன்படுத்துவது நல்லதல்ல . அந்த வாகனத்தை பயன்படுத்தியவருக்கு அதன் மீது ஆசையிருந்திருக்கும். அதை நாம் எடுத்துப் பயன்படுத்தும் போது பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாம். சிலர் வண்டியில் சென்று அந்த வாகனம் மூலமாகவே விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டார்கள் என்றால் நிச்சயமாக அந்த வாகனத்தை எடுக்கவே கூடாது. ஏனெனில், அந்த வாகனத்தில் துர்சக்திகள் இன்னும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் அதை பயன்படுத்தும் நமக்கும் ஆபத்து ஏற்படும்.
சில வீடுகளில் வாழ்ந்தவர்கள் இறந்துவிட்டதாக சொல்லி அந்த வீட்டை வாங்க சிலர் மறுப்பார்கள். சிலர் அதையெல்லாம் நம்பாமல் அதுப்போன்ற வீட்டை விலைக் கொடுத்து வாங்குவார்கள். அப்படி வாங்கும் போது அந்த வீட்டில் பூஜையோ அல்லது யாகாமோ செய்துவிடுவது நல்லது.
இறந்தவர்களின் ஆபரணங்களை பயன்படுத்தலாமா? என்று கேட்டால், பொதுவாகாவே வெள்ளி என்பது தோஷம் இல்லாதது என்று சொல்வார்கள். ஆகவே, இறந்தவர்களுடைய வெள்ளி ஆபரணத்தை பயன்படுத்தலாம். தங்க நகை பரம்பரை நகையாக இருந்தால் தாராளமாக அதை பயன்படுத்தலாம். குறைந்த ஆயுளில் இறந்தவர்கள் அணிந்திருந்த நகையை நாம் பயன்படுத்துவது தவறு. அந்த நகையை உருக்கி அதை வேறு டிசைன்னாக மாற்றி பயன்படுத்தலாம்.
இறந்தவர்கள் ஆபரணத்தை பயன்படுத்தும் போது அதை உப்பு மற்றும் மஞ்சளில் போட்டு எடுத்துவிட்டு பிறகு பயன்படுத்துவது நல்லது. அப்படி பயன்படுத்தும் போது அதிலுள்ள தோஷம், எதிர்மறை ஆற்றல் நீங்கிவிடும்.
சிலர் இறந்தவர்களின் ஆடையை பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் அதை நினைவாக பாதுகாத்து வைத்திருப்பார்கள். இறந்தவர்கள் உங்கள் மீது அன்பும், பாசமும் வைத்திருந்தால் நீங்கள் அவர்கள் ஆடையை பயன்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. இருப்பினும், மற்றவர்களின் ஆடையை பயன்படுத்தும் போது உப்பு, மஞ்சள் கலந்த நீரில் அதை நனைத்து பிறகு பயன்படுத்துவது நல்லது.