
இந்தோனேசியாவின் ஜாவா தீவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் ஜாவா அரிசி என அழைக்கப்பட்டு பின்னர் ஜவ்வரிசி என மருவியது.
அசல் ஜவ்வரிசி: இது ஜவ்வரிசி மரம் என்ற மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. உண்மையான ஜவ்வரிசி இந்தோனேசியத் தீவுகளில் வளர்கின்ற ஜவ்வரிசி மரம் (sago palm) எனப்படும் தாவரங்களில் இருந்து பெறப்படுகிறது. ஜவ்வரிசி மரம் பப்புவாத் தீவிலேயே மிக கூடுதலாக காணப்படுகிறது. அரெகாசெயா என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மெற்றொக்சிலன் சாகு என்பதே உண்மையான ஜவ்வரிசி தாவரமாகும். அதே சாதியைச் சேர்ந்த மெற்றொக்சிலன் ரம்பா என்ற தாவரமும் ஜவ்வரிசி பெறுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
ஜவ்வரிசி தாவரங்களின் பயன்பாட்டு நிலை: ஜவ்வரிசி தாவரங்கள் தாழ்ந்த சதுப்பு நிலங்களில் வளர்கின்றன. 9 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடியது. 15 ஆண்டுகளில் ஜவ்வரிசி தாவரம் முதிர்ச்சி நிலையை அடையும். இந்நிலையில் பல பூக்களைக் கொண்ட ஒரு பூந்துணர் (மஞ்சரி) உருவாகும். இக்காலத்தில் தாவரத் தண்டின் நடுப்பகுதியில் பெருமளவு மாப்பொருள் சேகரிக்கப்பட்டி ருக்கும். பூக்களில் இருந்து காய்கள் உருவாகி அவை முதிர்ந்து கனிந்ததும் தண்டிலுள்ள மாப்பொருள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு விடுவதோடு தண்டின் நடுப்பகுதி வெறுமையாகிவிடும். இதனால் காய்கள் பழுத்தப் பின்னர் தாவரம் செத்துவிடுகிறது.
சோறு (pith) பெறல்: ஜவ்வரிசி பெறுவதற்காக பயிர் செய்யப்படும் தாவரங்கள் பூந்துணர் (மஞ்சரி) தோன்றிய உடனேயே வெட்டி வீழ்த்தப் படுகின்றன. பின்னர் குற்றிகள் துண்டுகளாக வெட்டப்பட்டு பிளக்கப் படுகின்றன. இவற்றில் இருந்து சோறு என்னும் நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்து தூளாக்கப் படுகின்றன. இவ்வாறு தூளாக்கப்பட்ட பகுதியில் மாப்பொருளோடு நார்கள் கலந்திருக்கும். இத்தனை நீரோடு சேர்த்துப் பிசைந்து அடித்தட்டு ஒன்றினூடாக வடிய செய்வதன் மூலம் மாப்பகுதியிலிருந்து நார்கள் அகற்றப் படுகின்றன. பலத் தடவைகள் இவ்வாறு நீரினால் அலசியப் பின்னர் மாப்பகுதி உபயோகத்துக்கு ஏற்றதாக மாறிவிடுகின்றன.. அதனை உணவு பண்டங்கள் தயாரிப்பதற்காக நேரடியாக பயன்படுத்த முடியும்.
பயன்பாடு: ஜவ்வரிசி தூய மாப்பொருளை கொண்டுள்ளது. அதில் 88 சதவீதம் கார்போஹைட் ரேட்டும், 0.5 சதவீதம் புரதமும், மிக நுண்ணிய அளவு கொழுப்பும் அடங்கியுள்ளது. இது எளிதில் செரிமானம் அடையக் கூடியது. தென்மேற்கு பசிபிக் பகுதி மக்களின் அடிப்படை உணவாக ஜவ்வரிசி விளங்குகிறது. சூப், கேக், மாக்கூழ்கள், இனிப்புக்கூழ்கள் தயாரிப்பதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது.
போலியாக தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி: இரண்டாம் உலகப்போர் தொடங்கியப் பிறகு இறக்குமதி தடை செய்யப்பட்டது. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர் மைதாவுக்கு மாற்றாக கேரளப் பகுதியில் இருந்து மரவள்ளிக் கிழங்கு வாங்கி மாவாக்கி விற்று வந்தார்.
இதை அறிந்த மலேசியாவில் ஜவ்வரிசி வியாபாரம் செய்து வந்த போப்பட்லால் ஷா என்பவர் மாணிக்கம் செட்டியாரை சந்தித்து ஜவ்வரிசிக்கும் ஒரு டூப்ளிகேட் செய்து பார்க்கலாம் என இருவரும் சேர்ந்து முடிவெடுத்து பெரும் முயற்சிகளுக்கு பின் மரவள்ளிக் கிழங்கு மாவைத் தொட்டிலில் இட்டு அதை குலுக்கி குருணையாக திரட்டி பாத்திரத்தில் இட்டு வறுத்து அதை ஜவ்வரிசி போல மாறச்செய்து போலி ஜவ்வரிசியை கண்டு பிடித்தனர்.
1943 ஆம் ஆண்டில் இந்த மாற்று ஜவ்வரிசியை சேலத்தை மையமாக கொண்டு உற்பத்தி தொடங்கியது. அசல் ஜவ்வரிசிக் கும், மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசிக்கும் சுவையில் எந்த வேறுபாடும் காணமுடியவில்லை.