
நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசேஷமான உணவு நைவேத்தியமாக செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, மகர சங்கராந்திக்கு சர்க்கரைப் பொங்கல் என்பது போல் கார்த்திகை தீபத்திற்கு நெல் பொரியும், அவல் பொரியும் நிவேதனம் செய்யப்பட வேண்டும் என்று மயூரஷேத்திர புராணம் கூறுகிறது.
நெல்பொரி உருண்டைகள்:
நெல்பொரி 4 கப்
ஆர்கானிக் வெல்லம் 1 கப்
ஏலக்காய் தூள் 1 ஸ்பூன்
சுக்குப் பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் பல் 2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
கடையிலிருந்து நெல்பொரி வாங்கி வந்ததும் அதை சுத்தம் செய்யவும். ஏனென்றால் சில பொரிகளில் நெல் ஒட்டிக் கொண்டிருக்கும். அவற்றை நீக்கி சுத்தம் செய்து வாணலியில் 2 நிமிடம் நன்கு சூடு வரும் வரை சுடவைத்து இறக்கவும். அப்போதுதான் மொறுமொறுப்பாக கடைசி உருண்டை வரை இருக்கும். தேங்காயைக் கீறி சின்ன சின்ன பற்களாக நறுக்கி நெய்விட்டு ஈரப்பதம் போகும்வரை வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நல்ல கெட்டி பாகு காய்ச்ச வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நெல்பொரி, செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க சுக்கு, ஏலக்காய் பொடி சேர்த்து, வறுத்த தேங்காய் பல்லும் போட்டு கெட்டி பாகை விட்டு கிளறவும். சிறிது சூடாக இருக்கும் பொழுதே கையில் சிறிது நெய்யை தொட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடித்து விடவேண்டும். சூடு ஆறினால் பிடிக்க வராது.
பாகுபதம்: கெட்டி பாகு பதம். தண்ணீரில் சிறிது விட்டு உருட்டி பார்க்க நன்கு உருண்டு வரவேண்டும்.
அவல்பொரி உருண்டைகள்:
பொரித்த கெட்டி அவல் 1 கிலோ
ஆர்கானிக் வெல்லம் 1/4 கிலோ
பொட்டுக்கடலை 1 கைப்பிடி
வெள்ளை எள் 1 ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 ஸ்பூன்
சுக்கு பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் பல் 2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
பொரித்த அவலை வாங்கி வந்ததும் சல்லடை கொண்டு மண் துகள்கள் எதுவும் இல்லாமல் சலித்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் பொரித்த அவலைப் போட்டு சூடு வரும்வரை வறுத்தெடுக்கவும். பொட்டுக் கடலையையும் அதேபோல் சூடு வர வறுக்கவும். வெள்ளை எள்ளை பொரியும் வரை வறுத்துக்கொள்ளவும். தேங்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்தெடுக்கவும்.
வெல்லத்தை பொடி செய்து சிறிது தண்ணீர்விட்டு பாகு காய்ச்சவும்.
அகலமான பாத்திரத்தில் அவல் பொரி, சுக்கு, ஏலக்காய் பொடி, வறுத்த தேங்காய்ப் பல், பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை போட்டு வெல்லப்பாகை விட்டு கிளறவும். பொறுக்கும் சூட்டில் கைகளில் சிறிது நெய் தடவிக் கொண்டு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
குறிப்பு: சத்தான இந்த உருண்டைகளை பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸாகவும் செய்து கொடுக்கலாம். செய்வது ரொம்ப சுலபம். ருசியாகவும் இருக்கும்.