
உயிரினங்கள் அனைத்திற்கும் உடலை இயங்கச்செய்ய உணவு அடிப்படை தேவையாகும். ஆனால் சில உணவுகள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக இருப்பதால் அவற்றை சரியான தயாரிப்பு முறை அல்லது சமைக்காமல் உட்கொண்டால் விஷமாக மாறி சில சமயங்களில் மரணத்தைக் கூட ஏற்படுத்தும். அத்தகைய கொடிய விஷம் கொண்ட உலகின் 3 உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.மரவள்ளிக்கிழங்கு
மனிஹாட் எஸ்குலெண்டா, யூகா என்றழைக்கப்படும் மரவள்ளி கிழங்கு அமெரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட பிரேசில், பராகுவே மற்றும் ஆன்டிஸ் பகுதியைச் சேர்ந்தவை. அதன் இலைகளில் சயனைடு உற்பத்தி செய்யும் நச்சுகள் உள்ளதால் இவற்றை சரியான தயாரிப்பு இல்லாமல் உட்கொண்டால் பக்கவாதம் மற்றும் மரணத்தைக்கூட ஏற்படுத்தும்.
மரவள்ளிக்கிழங்கை கொதிக்க வைத்து, உலர்த்தி அல்லது தண்ணீரில் ஊறவைத்த பிறகுதான் இதில் உள்ள நச்சு கூறுகள் நீங்குகிறது. இருப்பினும், கவனமாக தயாரித்தாலும் கூட மரவள்ளிக்கிழங்கு விஷம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதோடு, நிரந்தர பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
2.பஃபர்ஃபிஷ்
ஜப்பானில் அறியப்படும் பஃபர்ஃபிஷ் என்ற ‘ஃபுகு’ கடலில் காணப்படும் மிகவும் விஷ மீன் இனங்களில் ஒன்றாகும்.
பஃபர்ஃபிஷின் கல்லீரல் மற்றும் பிறப்புறுப்பு சுரப்பிகளில் இருக்கும் டெட்ரோடோடாக்சின், சயனைடை விட 1200 மடங்கு அதிகநச்சுத்தன்மை கொண்டது. இதனால் அதன் உடலில் இருந்து நச்சுத்தன்மையை சரியாக அகற்றாமல் மீனை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சரியான முறையில் இதனை தயாரிக்கவில்லை எனில் 20 நிமிடங்களுக்குள் உணர்வின்மை, பக்கவாதம் மற்றும் சுவாசக்கோளாறுக்கு வழி வகுக்கும். இவ்வளவு விஷம் கொண்ட, இந்தமீனை சமைப்பதற்கு என்று ஜப்பானில் தனியாக பயிற்சி பெற்று உரிமம் பெறவேண்டும்.
3.டெத் கேப் காளான்
மனிதர்கள் விரும்பி உண்ணக்கூடிய பூஞ்சை குடும்பத்தில் டெத் கேப் காளான் மிகவும் விஷமாகக் கருதப்படுகிறது. ஐரோப்பாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் உலகம் முழுக்க பரவி உள்ளது. டெத் கேப் காளானில் அமடாக்சின் உள்ளது, இது வெப்பத்திற்கு அதிக எதிர்ப்பைக் கொண்ட ஒரு தெர்மோஸ்டபிள் நச்சு, எனவே சமைப்பதாலோ அல்லது கொதிக்க வைப்பதாலோ காளானின் நச்சுத்தன்மையை நீக்க முடியாது.
டெத் கேப் காளான்கள் மனிதர்களால் பொதுவாக உட்கொள்ளப்படும் பல உண்ணக்கூடிய இனங்களை ஒத்திருக்கின்றன, தற்செயலான விஷத்தின் அபாயத்தை அதிகரிக்கின்றன, இந்த பூஞ்சையை உட்கொண்ட 6-12 மணி நேரத்திற்குள் வயிற்று வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதோடு, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல் இழப்பை ஏற்படுத்துகிறது.
"உணவே மருந்து "என்பது பழமொழி. ஆனால், விஷமாகும் என்பதை மேற்கண்ட கட்டுரை தெளிவாக விளக்குகிறது.