

ஹைதராபாத் அதன் சமையல் பாரம்பரியத்தில் மிகவும் வளமானது மற்றும் நகரத்தின் பேக்கரிகள் உள்ளூர் மக்களிடையே ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. பிரியாணி மற்றும் ஹலீம் போன்ற உணவுகளைத் தவிர, ஹைதராபாத் அதன் உஸ்மானியா பிஸ்கட் போன்ற பேக்கரி உணவுகளுக்கும் பெயர் பெற்றது..
ஒரு காலத்தில் ஜவஹர்லால் நேருவின் காலை உணவு மெனுவில் முக்கிய அங்கமாக இருந்த ஒரு புகழ்பெற்ற பேக்கரியின் ரொட்டி (Bread) பற்றி உங்களுக்குத் தெரியுமா? நேருவின் காலை உணவில் தினமும் இடம் பிடித்த ஹைதராபாத் ரொட்டியைப் பற்றியும் அதைத் தயாரித்து தந்த பழமையான பேக்கரியைப் பற்றியும் காண்போம்.
1950களில், பிரதமர் ஜவஹர்லால் நேரு ஹைதராபாத்திற்கு வருகை தந்தபோது, சுபான் பேக்கரி என்ற பேக்கரி தயாரித்து அளித்த ரொட்டியின் சுவையால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அதன் பிறகு நேரு அவர்கள் ஹைதராபாத்தில் இருக்கும் போதெல்லாம், நேர்த்தியான சுவைக்குப் பெயர் பெற்ற சுபான் பேக்கரி ரொட்டியை தனது தினசரி காலை உணவின் ஒரு பகுதியாக அதை மிகவும் லிரும்பி சாப்பிடுவார்.
இது சுபான் பேக்கரியின் நற்பெயரை உயர்த்தியது மட்டுமல்லாமல், பேக்கரியை இந்தியாவின் வரலாற்று பாரம்பரியத்துடன் இணைத்தது. நகரத்தின் நவாப்கள் மற்றும் பிற பிரபல பிரமுகர்கள் கூட இந்த பேக்கரியின் விசுவாசமான வாடிக்கையாளர்களாக மாறினர்.
1948 ஆம் ஆண்டு சையத் காதரால் நிறுவப்பட்ட இந்த புகழ்பெற்ற பேக்கரி, ‘டம் கே ரோட்,’ காரிஸ்’ மற்றும் கிளாசிக் ‘உஸ்மானியா பிஸ்கட்’ போன்ற சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது.
சுபான் பேக்கரியை நிறுவுவதற்கு முன்பு, காதர் செகந்திராபாத்தில் பிரிட்டிஷ் படைப்பிரிவுக்கு ரொட்டி வழங்கும் ஒரு பேக்கரியில் பணிபுரிந்தார். பின்னர், அவர் ஹைதராபாத்தில் உள்ள ரெட் ஹில்ஸுக்கு குடிபெயர்ந்தார். ஒரு சிறிய கேரேஜில் இருந்து ரொட்டியை விற்றார். அவரது தயாரிப்பின் தரம் பற்றிய செய்தி பரவியவுடன், காதரின் வணிகம் வளர்ந்தது. அது ஒரு முறையான பேக்கரியை அமைக்க அவரைத் தூண்டியது, அந்த பேக்கரிக்கு அவர் தனது மகன் சுபானின் பெயரை வைத்தார்.
இந்த புதிய பேக்கரியில் ரொட்டியைத் தாண்டி விரிவடைந்து பல்வேறு வகையான உணவு வகைகளை காதர் மேலும் அறிமுகப்படுத்தலானார். இது ஹைதராபாத்தின் பேக்கரி துறையில் முன்னோடியாக சுபான் பேக்கரியின் நற்பெயரை நிலைநாட்டியது.
அந்நாட்களில் ஹைதராபாதில் பல இடங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசைகளில் நின்று ரொட்டிகளை வாங்கிச் செல்வர். இதன் மற்றொரு உணவான உஸ்மானியா பிஸ்கட் மிகவும் பிரபலமான ஒன்று. இதை ஈரானி டீயுடன் சேர்த்து சுவைத்து மகிழ்வர். இப்போதும் உள்ளூர் மக்களிடையே விருப்பமான உணவாக உஸ்மானியா பிஸ்கட் உள்ளது.
சுபான் பிஸ்கட்கள் மற்றும் பால் ரஸ்க்குகள் ஹைதராபாத் வீடுகளில் பிரதானமாகிவிட்டன, ஜவஹர்லால் நேரு சுவைத்து மகிழ்ந்த சுபான் பேக்கரி ரொட்டிகள் இன்றும் உலகளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.