

கத்தரிக்காய், பாகற்காய் போன்றவற்றில் பொரியல் செய்யும்போது, புளியோதரைப் பொடியை வாங்கித்தூவிவிட்டால் சுவையும் கூடும், பொரியலும் உதிர் உதிராக இருக்கும்.
தடிமனான தோல் உள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு பிறகு உரித்தால் எளிதில் வந்து விடும். சுளைகளையும் சுலபமாக உரித்துவிடலாம்.
குருமா, குழம்பு தயாரிக்கும்போது சில சமயம் உப்பு அதிகமாகி விடும். சிறிது கோதுமைமாவை சப்பாத்தி உருண்டை
போல் உருட்டி குழம்பினுள் போட்டு சில நிமிடங்களில் எடுத்து விட்டால் உருண்டை அதிகப்படியான உப்பை உறிஞ்சிவிடும்.
பயறுவகைகளை ஊற வைக்கும்போது தனித்தனி பாலித்தீன் பைகளில், பயறுகளைப் போட்டு தண்ணீர் விட்டு இறுக்கமாக கட்டி வைத்துவிடுங்கள். விரைவாகவும், ஒரே மாதிரியாகவும் ஊறிவிடும்.
மிக்ஸியில் வெந்தயம், ஏலக்காய் போன்றவற்றை அரைக்கும்போது, அதன் வாசனை எளிதில் போகாது. ஒரு கைப்பிடி நிலக்கடலையைப் போட்டு அரைத்து எடுத்தால் வாசனை அறவே நீங்கிவிடும்.
போளி, கொழுக்கட்டைக்கு செய்யும் பூரணத்தையும் பிரட்டில் சாண்ட்விச் போல செய்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
சமையலுக்கு எவர்சில்வர் கரண்டிகளைத் தவிர்த்து, மரக்கரண்டிகளை பயன்படுத்துவதுதான் நல்லது.
கிளறுவது சுலபம். பாத்திரத்தில் கோடு விழாது. கையிலும் சூடு தாக்காது.
ஃ ப்ளாஸ்கில் காபி, டீயை ஊற்றும் முன், கொதிக்கும் தண்ணீரை விட்டு நன்றாக் குலுக்கிக் கொட்டிவிடவும். இதேபோல் குளிர்ச்சியான பானத்தை நிரப்பும் முன் ஐஸ்வாட்டரை பயன்
படுத்தலாம். இப்படிச் செய்வதால்ஃப்ளாஸ்க்கில் நிரப்பும் திரவத்தின் இயல்பு நிலை மாறாமல் இருக்கும்.
தேய்க்கும்போது, மைதா மாவுக்கு பதிலாக கார்ன் ஃப்ளார் மாவை பயன்படுத்துங்கள். நன்றாக தேய்க்கவரும். பொரிக்கும்போது தனியாக உதிராது.
பால் கொழுக்கட்டை செய்யும்போது, அரிசிமாவை வேகவைத்து உருட்டிப் போடுவதற்கு பதிலாக, தேன்குழல் அச்சில், பெரிய துளையுள்ள தட்டை வைத்து, அதில் மாவை போட்டுப் பிழிந்து துண்டுகளாக்கி இனிப்புக் கலவையில் சேர்க்கலாம்.
காய்கறிகள் மீந்துவிட்டதா? கவலை வேண்டாம். அவற்றை துண்டுளாக்கி, உப்பு கலந்த மோரில் ஊறவிடுங்கள். இதை வெயிலில் மோர் வற்றும்வரை உலர்த்தி பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். இந்தக் காய்களை எண்ணெயில் பொரித்து, சாப்பாட்டுடன் தொட்டு சாப்பிடலாம்.
இட்லியும், சட்னியும் சேர்ந்தே செய்ய ஒரு சூப்பரான ஐடியா. ஒரு தட்டில் இட்லிக்கு ஊற்றி, மற்றொரு தட்டுக்குழியில் தக்காளி, பச்சை மிளகாய்த் துண்டுகளையும் போட்டு வேகவிட்டு எடுங்கள். இதையே தக்காளி தொக்காக அரைத்துத் தொட்டுக்கொள்ளலாம்.