
சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வர என்ன செய்ய வேண்டும்?
சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது ஒரு கப் புழுங்கலரிசியைச் சேர்த்துக்கொண்டால் சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.
சமைக்கும்போது பருப்பு சீக்கிரமாக வெந்துவிட என்ன வழி?
துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக்கொண்டால் பருப்பு சீக்கிரம் வெந்து விடும்.
மோர்க்குழம்பு சுவையாக இருக்க ஒரு வழி சொல்லுங்களேன்?
மோர்க்குழம்பில் கொஞ்சம் மாம்பழத் துண்டுகளைப் அரிந்து போடலாம். மோர்க்குழம்பு வைக்கும்போது அரிநெல்லிக்காய்களை அரைத்துப்போட்டாலும் சுவை மிகுதியாக இருக்கும்.
வற்றல் குழம்பு செய்யும்போது சுவை அதிகரிக்க என்ன வழி?
வற்றல் குழம்பு செய்யும்போது,கொதித்த பின்னர் நெல்லிக்காய் அளவு வெல்லம் போட்டால் சுவை அதிகரிக்கும்.
நெய் வாசனையுடன் இருக்க என்ன வழி?
வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது அரைக்கரண்டி வெந்தயத்தைப்போட்டால் நெய் கமகமவென்ற வாசனையுடன் இருக்கும்.
பால் அடிபிடித்தால் என்ன செய்யவேண்டும்?
பால் அடி பிடித்து தீய்ந்த வாசனை வந்தால், அதில் ஒரு வெற்றிலையை போடவும். அடிபிடித்த வாசனை போய் விடும்.
அல்வா நன்றாக இருக்க என்ன ஒரு வழி?
அல்வா செய்யும்போது வெண்ணையை அரைப்பதமாக உருக்கி வைத்துக்கொள்ளவும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அல்வா கிளறினால், நெய் பதமாக காய்ந்து அல்வா சுவையாக இருக்கும்.
தயிர் பச்சடி வித்தியாசமான சுவையுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தயிர் பச்சடியில் வெங்காயத்துக்கு பதிலாக கோவைக்காயை சேர்த்துப்பாருங்களேன். பச்சடி புதுச்சுவையுடன் இருக்கும்.
முறுக்கு மொறுமொறுப்புடன் இருக்க ஒரு வழி சொல்லுங்களேன்?
முறுக்கு செய்யும்போது கடலை மாவைக் குறைத்து பொட்டுக்கடலை மாவை சேர்த்தால், மொறுமொறுப்புடன் இருக்கும்.
காபி டிகாக்ஷன் கெட்டியாக இருக்க என்ன செய்யவேண்டும்?
காபி ஃபில்டரின் அடியில் சிறிதளவு உப்பு போட்டு, அதன் மீது காபிப்பொடியைக் கொட்டி வெந்நீரை ஊற்றினால் டிகாக்ஷன் கெட்டியாக இருக்கும்.
இட்லி மாவு மீந்துவிட்டால் அதை பயன்படுத்த ஒரு வழி?
இட்லி மாவு மீந்துவிட்டால், அதில் சிறிது துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு சேர்த்து மிளகாய் வற்றலுடன் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கிப் போட்டு சுவையான அடை செய்யலாம்.
வீட்டில் செய்யும் ஜாம் நீண்ட நாள் கெடாமல் இருக்க என்ன வழி?
வீட்டில் ஜாம் செய்யும்போது அதிகம் பழுக்காத பழங்களைப் பயன்படுத்தினால் ஜாம் நீண்ட நாள் கெடாது.