சுள்ளென்ற சுவை தரும் கேரள ஸ்டைல் உள்ளி சம்மந்தி (ulli chammanthi) செய்யலாமா?
பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் கேரளாவில் செய்யப்படும் உணவுகள் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். காரணம் இயற்கையான மண்ணின் மணத்துடன் அங்கு விளையும் மசாலா பொருட்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவைகள் அவர்கள் செய்யும் சமையலுக்கு கூடுதல் ருசியை தருவதாக சொல்வார்கள்.
அங்கு சிறப்பான மரவள்ளிக்கிழங்கு உணவிற்கு தொட்டுக்கொள்ள செய்யப்படும் வெகு பிரபலமான கேரள உள்ளி சம்மந்தி (ulli chammanthi) எனப்படும் சுவையான மற்றும் செய்ய எளிதான வெங்காய சட்னி அல்லது துவையல் வகை நமது தோசை இட்லி சாதத்துக்கும் பொருந்தும்.
இந்த சட்னி பற்றிய தகவல்கள் திரட்டியதில் இதன் செய்முறை அடிப்படை ஒரே மாதிரி என்றாலும் அதிலும் சில வேறுபாடுகளைக் காணமுடிகிறது. ஆனால் இதற்கு பயன்படுத்தும் எண்ணெய் மட்டும் தேங்காய் எண்ணெய்தான் என்பதில் மாற்றமில்லை. சிவப்பு மிளகாய் இல்லை எனில் மிளகாய்த்தூளும் பயன்படுத்தலாம். உள்ளி என்றால் வெங்காயம் சம்மந்தி என்றால் சட்னி என பொருள்படும் உள்ளி சம்மந்தி செய்முறைகளை பார்ப்போம்.
உள்ளி சம்மந்தி செய்முறை-1
தேவை;
சின்னவெங்காயம் அல்லது வெங்காயத்தாள்கள் - 15
சிவப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய்- 3
தேங்காய் எண்ணெய்- 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை;
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கழுவவும். வெங்காயத்தை பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றுடன் ஒரு பிளெண்டர் அல்லது மிக்சி வைப்பரில் சில நொடிகள் கொரகொரப்பாக அரைத்து கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். ஒரு கரண்டியில் தேங்காய் எண்ணெயை சூடு செய்து அந்த சட்னி மீது கொட்டிக் கலக்கவும். செய்ய வெகுசுலபமான இந்த சட்னியைத்தான் அங்கு
வேகவைத்த மரவள்ளிக்கிழங்குடன் பரிமாறுவார்கள்.
உள்ளி சம்மந்தி செய்முறை -2
தேவை:
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய்-3
உப்பு - தேவைக்கு
தேங்காய் எண்ணெய், - 3 டீஸ்பூன்
புளி (விரும்பினால்).- சிறு அளவு
செய்முறை;
சின்னவெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து அடுப்பில் சுட வைத்த ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அரைத்த கலவையை அதில் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைக்கவும். பரிமாறும் போது இந்த சட்னி மேலும் தேங்காய் எண்ணெய் ஊற்றினால் சுவைகூடும்.
உள்ளி சம்மந்தி செய்முறை - 3
தேவை;
சின்ன வெங்காயம்- 10 அல்லது 15 (அ)
பெரிய வெங்காயம் - 2-3 மீடியம் சைஸ்
தேங்காய்த்துருவல் -1 கப்
சிவப்பு மிளகாய் - 3, அல்லது காரத்திற்கேற்ப
பூண்டு - 3-4 பற்கள்
இஞ்சி - சிறு துண்டு
சீரக விதைகள் - 1/2 தேக்கரண்டி
கடுகு -1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு
புளி - ஒரு சிறிய துண்டு (விரும்பினால் மட்டும்)
தேங்காய்எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை;
ஒரு கடாயை சூடுபடுத்தி சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி பின் தேங்காய்த் துருவல், சிவப்பு மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் போட்டு நன்கு சிவந்து பொன்னிறமாகும் வரை வதக்கி ஆறவிட்டு மிக்சியில் இட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
இப்போது அதே கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறவும். தேவையான உப்பையும் சேர்க்கவும். (இத்துடன் விரும்பினால் புளி சிறிய வெல்லம் சேர்க்கலாம்) இது நம்மூர் ஸ்டைலில் இருக்கும். இதை பாட்டிலில் அடைத்து 2 நாட்கள் பயன்படுத்தலாம்.