இன்றைய நவநாகரீக உலகில் உணவு முறையில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. அவ்வகையில் நகர மக்கள் பலருக்கும் பிடித்தமான உணவு பீட்சா. இது தற்போது பல கிராமங்களிலும் மிக எளிதாக கிடைக்கிறது. பெரும்பாலும் பீட்சா வட்ட வடிவமாகவே இருக்கிறது. இது ஏன் என்று என்றேனும் நீங்கள் சிந்தித்தது உண்டா? அதற்கான காரணம் என்னவென்று அறிய முற்பட்டு இருக்கிறீர்களா? இல்லையெனில் பரவாயில்லை; இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய இளசுகளின் பிடித்தமான உணவுகளில் ஒன்றான பீட்சா, 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டது என கூறப்படுகிறது. அதனுடைய நவீன வடிவம் தான் இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. ரோமானியாவைச் சேர்ந்த வீரர்கள் சீஸ் மற்றும் ஆலிவ் ஆயிலை, மாட்சாவில் கலந்த போது நவீன பீட்சா உருவானது எனக் கூறப்படுகிறது. இருப்பினும் பீட்சாவை ஏன் வட்ட வடிவில் உருவாக்கினார்கள் என்பது குறித்த தகவல்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன.
ஒவ்வொரு பொருளையும் தயாரிக்கும் போது, அதற்கென சில விதிமுறைகள் வகுக்கப்படும். அதேபோல் தான் பீட்சாவிற்கும் 1987 ஆம் ஆண்டில் சில விதிமுறைகளை வகுத்தது ‘அசோசியாசியோன் வெரேஸ் பீட்சா நெப்போலிடானா’ என்ற நிறுவனம். இதில் மிகவும் முக்கியமான விதியென்றால் பீட்சாவின் விட்ட அளவு தான். இதன்படி தயார் செய்யப்படும் பீட்சாக்கள் 13.7 அங்குல விட்டத்திற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது பீட்சா வட்டமாக இருக்க வேண்டும். சில இடங்களில் சதுர வடிவ பீட்சாக்கள் தயாரிக்கப்பட்டாலும், வட்ட வடிவம் தான் பீட்சாக்களின் பொதுவான வடிவமாகும்.
பீட்சா தயாரிப்பதற்கு முன்பாக, இது காற்றில் சுழற்றப்படுகிறது. பீட்சா செய்யப் பயன்படும் மாவு, காற்றில் சழல்வதற்கு வட்ட வடிவில் இருக்க வேண்டும் என அறிவியல் கூறுகிறது. சதுரம் அல்லது செவ்வக வடிவ பீட்சாக்களை காற்றில் சுழற்ற முடியாது. பீட்சாவை சமைக்கும் போது, வட்டத்தின் பரப்பளவு முழுக்க ஒரே அளவில் சூடாக்க வேண்டும். பீட்சா தவிர்த்து பெரும்பாலான கேக்குகள் வட்ட வடிவத்தில் இருப்பதற்கான காரணமும் இதே தான்.
பீட்சாவை பலரும் ஆன்லைன் மூலமாகவே ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். பீட்சா வட்டமாக இருந்தாலும, இது அடைக்கப்படும் பெட்டியானது சதுரமாகவே இருக்கும். இதற்கும் ஒரு காரணம் உண்டு. வட்ட வடிவப் பெட்டிகளை விடவும் சதுர வடிவப் பெட்டிகளை உருவாக்குவது மிகவும் எளிது; அதோடு விலையும் மலிவு. இவை ஒரே துண்டு அட்டையில் உருவாக்கப்படுகின்றன. டெலிவரி செய்யும் போது எடுத்துச் செல்வதற்கும் எளிதாக கையாள முடியும்.
பீட்சாவை பொதுவாக வெட்டும் போது முக்கோண வடிவில் வெட்டுவார்கள். வட்டமாக இருக்கும் ஒரு பொருளை சமமாக பிரிக்கவே முக்கோண வடிவில் வெட்டப்படும். இந்த நடைமுறை தான் பீட்சாவிலும் பயன்படுத்தப்படுகிறது.
பீட்சா மட்டுமல்ல நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி வரலாறும், அடிப்படைத் தன்மைகளும் உண்டு. இனிமேல் நீங்கள் எப்போதாவது பீட்சா சாப்பிடும் போது, நிச்சயமாக அதன் வட்ட வடிவம் குறித்த அறிவியல் காரணம் நினைவுக்கு வரும்!