
இடியாப்பத்துக்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணைய் சேர்த்துக்கொண்டால், இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும்.
அவல் பொரியை அப்படியே பாகில் போடுவதற்கு பதில், பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பொரி உருண்டை பிடித்தால் பொரி உருண்டை மொறு மொறுப்பாக இருக்கும்.
பீட்ரூட்டை தோலுடன் வேகவைத்து, பின்பு தோலெடுத்தால் சீக்கிரம் தோல் பிரிந்துவிடும். நறுக்குவதும் எளிது.
சூப்பில் போட பிரட் துண்டுகள் இல்லையா? ஜவ்வரிசி வடாம் பொரித்து உடைத்து சிறு துண்டுகளாக்கி சூப்பில் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.
சின்ன நெல்லிக்காயை கேரட் துருவலில் சின்னதாக துருவிக்கொண்டு, மாங்காய் சாதத்துக்கு தாளிப்பது போல் தாளித்து சுவையான நெல்லிக்காய் சாதம் தயார் செய்யலாம்.
வெயில் காலங்களில் முட்டையை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
கடலை எண்ணெயில் சிறிது புளியைப்போட்டு வைத்தால் ஒரு சீக்கிரமாக கெட்டுப்போகாது.
இட்லி மாவு நீர்த்துப் போய்விட்டால் அதில் சிறிது எண்ணெயில்லாமல் வறுத்த ரவையைக் கலந்து அரைமணி நேரம் ஊறிய பிறகு இட்லி வார்த்தால் சுவையாக இருக்கும்.
மிளகாய் பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை நீள வாக்கில் கீறவும். அதனுள் சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சைச்சாறு விடவும். பிறகு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்தால் டேஸ்ட்டாக இருப்பதோடு காரமும் இருக்காது.
சோமாஸ் செய்யும்போது உள் வைக்கும் பூரணம் உதிராமல் இருக்க, அத்துடன் சிறிது பாலைச் சேர்த்தால் போதும்.
துவரம் பருப்பு வேகவைக்கும்போது ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
பருப்புவடைக்கு அரைக்கும்போது, ஊறவைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள்ஸ்பூன் புழுங்கல் அரிசி சேர்த்து அரைக்கவும். பிறகு மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டவும். வடை கரகரப்பாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும்.