அஜினோமோட்டோ என்று சொல்லப்படும் ஒரு வகை உப்பை உணவில் சுவைக்காக ஹோட்டல் போன்ற வெளியிடங்களில் சேர்க்கிறார்கள். இந்த உப்பை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லப்படுவது எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
அஜினோமோட்டோ என்பது Mono sodium Glutamate என்னும் உப்பாகும். 'அஜினோமோட்டோ' என்பது, இந்த உப்பை ஜப்பானில் 100 வருடங்களாக தயாரித்துக் கொண்டிருக்கும் கம்பெனியின் பெயர். நமக்கு அறுசுவைகள் தெரியும். ஆனால், இந்த அஜினோமோட்டோ உப்பு நாக்கில் படும்போது Umami என்றொரு சுவையை உருவாக்குவதாகச் சொல்லப்படுகிறது.
அதனால்தான் இந்த உப்பை சமையலில் அதிக சுவைக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் உணவில் இது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டிலும் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
Mono sodium glutamateல் சோடியம் மற்றும் குளுடாமேட் இருக்கிறது. சோடியம் நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உப்பிலே இருக்கிறது. குளுடாமேட் என்பது முக்கியமான Neurotransmitter ஆகும். இது மூளையிலிருந்து செல்லும் சிக்னலை கடத்துவதற்காக உதவும் ஒரு வகை ரசாயனமாகும்.
Mono sodium glutamateஐ சாப்பிட்டதும் இது வயிற்றில் சென்று சோடியம் தனியாகவும், குளுடாமேட் தனியாகவும் பிரிந்து விடுகிறது. குளுடாமேட் என்பது நாம் பயன்படுத்தும் பலவித உணவுகளில் இருக்கிறது. காளான், தக்காளி, சில வகை சீஸ், Seaweed போன்றவற்றில் குளுடாமேட் அதிகமாகவே இருக்கிறது.
குளுடாமேட் 95 சதவீதம் நம் வயிற்றில் உள்ள Enterocytes என்னும் செல்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. எனவே, 100 mg குளுடாமேட் உப்பை எடுத்துக்கொண்டால், அதில் 95 mg உப்பு வயிற்றில் உள்ள செல்களுக்கு உணவாகிவிடும். மீதம் இருக்கும் 5 சதவீதத்தில் இருக்கும் 4 mgஐ கல்லீரல் மெட்டபாலிசம் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய இரத்தத்தில் Blood brain barrier என்று ஒன்று இருக்கிறது. இது தேவையில்லாத எதையும் உள்ளே அனுமதிக்காது. எனவே, இது இரத்தத்தில் இருக்கும் குளுடாமேட்டை மூளைக்கு செல்ல அனுமதித்காது. மூளைக்கு தேவையான குளுடாமேட்டை அதுவே இயற்கையாக தயாரித்துக் கொள்ளும்.
எனவே, நாம் உணவில் எடுத்துக்கொள்ளும் Monosodium glutamate உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்வது உண்மையல்ல. நம்முடைய உணவுப் பாதுகாப்பு துறையான Fssai, அமெரிக்காவின் FDA, ஐரோப்பியாவின் Efsa மற்றும் World Health Organisationன் JECFA ஆகிய அனைத்தும் அஜினோமோட்டோவை மிகவும் பாதுகாப்பானது என்று சொல்வது குறிப்பிடத்தக்கது.