
கதம்ப பருப்பு அடை தோசை
இந்த அடை எங்கள் வீட்டில் என் பாட்டி காலத்தில் வாரம் ஒருமுறை உணவில் கண்டிப்பாக இடம்பெற்ற சுவையான சிற்றுண்டி ஆகும். பருப்புகளின் புரதசத்துக்கள் முழுமையாக தோசை வடிவத்தில் கிடைக்கும். இரவு நேர டினருக்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 250 கிராம்
துவரம் பருப்பு – 100 கிராம்
கொள்ளு – 100 கிராம்
பாசிப்பயறு – 100 கிராம்
தட்டைப் பயறு – 100 கிராம்
உடைத்த கருப்பு உளுந்து – 100 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
வெள்ளை உளுந்து பருப்பு – 100 கிராம்
சீரகம் – 2 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 10 நொ.
கறிவேப்பிலை – 1 கொத்து
சின்ன வெங்காயம் உரித்தது – 20 நொ.
பூண்டு உரித்தது – 10 பல்
இஞ்சி – 50 கிராம்
தக்காளி (பெரியது) – 2
செய்முறை:
அரிசி மற்றும் பருப்புகளை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை அரை கப் தண்ணீரில் ஊறவைக்கவும். பூண்டு, தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
Grinder ல் முதலில் ஒரு கைப்பிடி அளவு அரிசி பருப்புடன் ஊறவைத்த மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து பாதி அரைந்ததும், நறுக்கிய பூண்டு, தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
பிறகு மீதமுள்ள அரிசி பருப்பு, மிளகாய் வற்றல் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து விழுதாக, கெட்டியாக அரைத்து உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கலக்கவும். மாவு புளித்ததும் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து லேசான தோசைகளாகவும் வார்த்து எடுக்கலாம். அல்லது, மாவுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கலந்து தோசைக்கல்லில் மாவை எடுத்து ரொட்டிபோல தட்டி எண்ணை ஊற்றி, இரண்டு மூன்று முறை திருப்பி போட்டு எடுத்தால் மொறு மொறுப்பாக சாப்பிட சுவையாக இருக்கும்.
தக்காளி கத்தரி, உருளை கிழங்கு, கடைசல் சட்னி இதற்கு இணையானதாக இருக்கும். அல்லது, காரச் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
கொள்ளு பொங்கல்
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 1 கப்
பச்சரிசி – 2 கப்
உரித்த சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் – 100 ml
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் பச்சரிசியை கழுவி சுத்தம் செய்து ஊறவைக்கவும். வாணலியில் கொள்ளுப்பயறை போட்டு நன்கு பொரிந்த பக்குவத்தில் சீரகம், மிளகு சேர்த்து வறுத்து எடுத்து ஆறவிடவும்.
ஆறிய பின் மிக்ஸியில் ஒரு நிமிடம் சுற்றி, கொள்ளுபயறு இரண்டாக உடையும் அளவில் பொடிக்கவும். அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி துருவல் சேர்க்கவும். பின்னர் பொடித்த கொள்ளு, பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
பிறகு ஊறவைத்த பச்சரிசியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மூடிவைத்து, மூன்று விசில் வரும்வரை விடவும்.
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, முந்திரி பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து குக்கரில் உள்ள பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.