
நீங்கள் ஓர் உலகம் சுற்றும் உல்லாசப் பிரியராகவும், காபிக்கு அடிமையானவராகவும் இருந்தால், நீங்கள் தவறாமல் ருசிக்க வேண்டிய, வித்யாசமான சுவையில் தயாரிக்கப்படும் 6 வகை காபியைப் பற்றின விவரங்களை தெரிந்துகொள்வது மிக முக்கியம். பாரம்பரிய, கலாச்சார வழிமுறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்படும் இந்த 6 வகை பானம் எந்தெந்த நாடுகளில் கிடைக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.காபியின் பிறப்பிடமான எத்தியோப்பியாவில் காபியை நுட்பமான முறைகளை பின்பற்றி, தயாரித்து, அருந்தி மகிழ்கின்றனர். காபி கொட்டைகளை பதமாக வறுத்து, அரைத்து, டிகாக்ஷன் இறக்கி, ஃபிரஷ்ஷாக 'ஜெபனா பாட்' (jebena Pot) களில் சேமித்து வைக்கின்றனர்.
2.இத்தாலியின் எஸ்பிரஸ்ஸோ கலாச்சாரம்: இத்தாலிய மக்களுக்கு காபி குடிப்பதென்பது, கடைகளுக்கு சென்று விரைவாக ஒரு எஸ்பிரஸ்ஸோ காபியை அருந்துவதாகும். எஸ்பிரஸ்ஸோ (Espresso) என்பது அதிக அழுத்தம் கொண்ட சூடான நீரை நன்கு அரைக்கப்பட்ட காபி கொட்டைகள் வழியாகச் செலுத்தித் தயாரிக்கப்படும் ஓர் அடர்த்தியான, வலுவான காபியாகும்.
நார்மல் வகைக் காபியில் இருப்பதை விட எஸ்பிரஸ்ஸோவில் ஒரு யூனிட் அளவிற்கு காஃபின் அதிகமிருக்கும். இதை பெரிய அளவிலான கப்களில் வைத்து நீண்ட நேரம் குடித்துக் கொண்டிராமல் அளவோடு விரைவாக அருந்தி முடித்துவிடுவார்கள். கேப்புச்சினோவை காலை வேளையில் தவறாமல் அருந்துவது இத்தாலியர்களின் வழக்கம்.
3.மொரோக்கோ: ஸ்பைஸ்ட் காபி இங்கு பிரபலம். காபி டிகாஷன் இறக்கும்போது அதனுடன் ஏலக்காய், பட்டை, ஜாதிக்காய் போன்ற மூலிகைப் பொருட்களின் பவுடர்களையும் சேர்த்து டிகாஷன் இறக்கி காபி தயாரிப்பார்கள். இதன் மூலம் உடலுக்கு வெது வெதுப்பான உஷ்ணமும் சுறுசுறுப்பும் கிடைக்க வாய்ப்பாகும்.
4.ஸ்வீடிஷ் ஃபிகா (Swedish Fika): ஸ்வீடன் மக்களுக்கு ஃபிகா என்பது வெறுமனே காபி ஷாப் சென்று ஒரு காபியை குடித்துவிட்டு வருவது மட்டுமல்ல. பாரம்பரிய முறைப்படி, நண்பர்கள் அல்லது உடன் பணிபுரிபவர்களுடன் ரிலாக்ஸாக சென்று காபியுடன் ஒரு சின்ன பன் அல்லது பிஸ்கட்களை சாப்பிட்டுவிட்டு வரும் ஓர் இடைவேளை யாகும். இது, பிறருடன் தொடர்பு வைத்துக்கொள்ளவும், சொசைட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாகும்.
5.துருக்கி: துருக்கியிலும் காபி டிகாக்ஷன் அடர்த்தியும் வலுவும் நிறைந்ததாக தயாரிக்கப்படுகிறது. இந்த டிகாஷனை செஸ்வே (Cezve) எனப்படும் ஒரு சிறிய, நீண்ட கைப்பிடியுள்ள உலோகப் பாத்திரத்தில் சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர். டர்க்கிஷ் காபி, யுனெஸ்கோ (UNESCO) வின், நன்மதிப்பு பெற்ற பொருட்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6.வியட்நாமின் எக் (Egg) காபி மற்றும் சொட்டு சொட்டாக இறக்கப்பட்ட ஸ்ட்ராங் டிகாஷன்: அடர்த்தியாக இறக்கப்பட்ட ஸ்ட்ராங் டிகாஷனுடன் இனிப்பூட்டிய கன்டென்ஸ்டு மில்க் அல்லது மிக்ஸியில் அடித்த முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து, கிரீமியான டெக்சரில் இங்கு காபி தயாரிக்கப்படுகிறது. இது, டெஸ்ஸர்ட் சாப்பிட்ட அனுபவத்தை தரக்கூடிய காபி.
காபி பிரியர்கள் அடுத்தமுறை வெளிநாடு பயணம் செல்லும்போது, மேலே கூறப்பட்ட காபிகளை ருசித்து
புதுமையான அனுபவம் பெற்று வாருங்கள்.