

1. முருங்கை கீரை தொக்கு
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை – 2 கப்
கொத்தமல்லி இலை – 1/2 கப்
கறிவேப்பிலை – 1/4 கப்
வறுப்பதற்கு:
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
தனியா – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4-6 (காரத்திற்கு ஏற்ப)
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
தொக்கு செய்ய:
புளி – 1 பெரிய எலுமிச்சை அளவு
பூண்டு – 3-4 பல் (விருப்பமானால்)
வெங்காயம் – 1 சிறியது, பொடியாக நறுக்கியது (விருப்பமானால்)
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – 1 தேக்கரண்டி (விருப்பமானால்)
தாளிக்க:
நல்லெண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
செய்முறை:
முருங்கைக் கீரை, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை நன்றாக கழுவி, நன்கு உலர்த்தவும். ஒரு வாணலியில் எண்ணெய் இல்லாமல், உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு தனியா, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். இறுதியாக பெருங்காயம் சேர்த்து, அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும் (விருப்பமானால்). பின்னர் முருங்கை கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். புளி சேர்த்து ஈரம் காயும் வரை வதக்கவும்.
வதக்கியவை ஆறியதும், மசாலா பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்து, கொரகொரப்பாக அல்லது நைசாக அரைக்கவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்).
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி வைத்திருக்கவும்.
இறுதியில் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும். அற்புதமான சுவையில் முருங்கை கீரை தொக்கு தயார்.
2. முருங்கைக் கீரை கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
முருங்கைக் கீரை (நறுக்கியது) – 1/2 கப்
தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக் கீரை, தேங்காய், பச்சை மிளகாய், உப்பு அனைத்தையும் அரிசி மாவில் சேர்த்து கலக்கவும். சிறிது நேரம் ஊற வைத்த பிறகு, உருண்டைகள் செய்து ஆவியில் வேகவைக்கவும். சுவையான சத்தான முருங்கைக் கீரை கொழுக்கட்டை ரெடி.
3. முருங்கைக் கீரை புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - நான்கு
மல்லி விதைகள் - இரண்டு டீஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
மேலே உள்ள பொருட்களை கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி சூடு ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து இரண்டு இரண்டாக வெட்டிய சின்ன வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரையும் சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து அதையும் கரைத்து எடுத்து தக்காளியுடன் சேர்க்கவும். அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான முருங்கைக் கீரை புளிக்குழம்பு தயார்.
4. முருங்கை கீரை புட்டு
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை: 1 கட்டு (சிறியதாக நறுக்கியது)
அரிசி மாவு (புட்டு மாவு): 2 கப்
துருவிய தேங்காய்: 1/2 கப்
சின்ன வெங்காயம்: 10 (சிறியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய்: 3 (காரத்திற்கு ஏற்ப)
பூண்டு: 5 பற்கள் (தட்டியது)
சீரகம்: 1 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு,
உளுந்தம்பருப்பு
காய்ந்த மிளகாய் (1)
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்: 2 தேக்கரண்டி
உப்பு & தண்ணீர்: தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். வெதுவெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து, மாவை உதிரி உதிரியாகப் பிசையவும்.
பின்னர் பிசைந்த மாவுடன் சிறியதாக நறுக்கிய கீரை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தட்டிய பூண்டு, சின்னசீரகம் மற்றும் பாதி துருவிய தேங்காயைச் சேர்த்து லேசாகக் கிளறி விடவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இட்லி தட்டில் ஈரத் துணியை விரித்து, கலந்து வைத்துள்ள கீரை மாவு கலவையை பரப்பி வைக்கவும். மூடி போட்டு 10 முதல் 12 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.
வெந்த புட்டை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி உதிர்த்து விடவும். ஒரு சட்டியில் நல்லெண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து புட்டுடன் சேர்க்கவும். மீதமுள்ள தேங்காய்த் துருவலையும் தூவி நன்றாகக் கிளறவும். கமக்கமக்கும் கிராமத்து சுவையில், முருங்கைக் கீரை புட்டு தயார்.
தினமும் ஒரே மாதிரியாகச் சமைக்காமல், முருங்கைக்கீரையின் முழு நன்மைகளும் கிடைக்கக்கூடிய 4 மாறுபட்ட, சுவையான கிராமத்து உணவுகளை மிக எளிதாக உங்கள் குடும்பத்தினருக்குச் செய்து அசத்தலாம்.