
குதிரைவாலி டிரை ஃப்ரூட்ஸ் பொங்கல்:
குதிரைவாலி ஒரு கப்
பால் ஒரு கப்
வெல்லம் 1கப்
தண்ணீர் ஒரு கப்
நெய் நான்கு ஸ்பூன்
முந்திரிப் பருப்பு 10
பாதாம் 10
அக்ரூட் 1 ஸ்பூன்
பேரிச்சம் பழம் 4
காய்ந்த திராட்சை 10
மலை வாழைப்பழம் 2 (சின்னது)
உப்பு ஒரு சிட்டிகை
வெல்லத்துடன் சிறிது தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். குதிரைவாலியை ஒரு கப் தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து குக்கரில் போட்டு பால், தண்ணீர் இரண்டையும் தலா ஒரு கப் விட்டு இரண்டு விசில் வரும் வரை வைத்து அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து அணைக்கவும். பிரஷர் போனதும் அரிசியை நன்கு மசித்து வெல்லக் கரைசலையும், நெய்யையும் விட்டு பொடியாக நறுக்கிய வாழைப்பழம், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம், அக்ரூட், பேரீச்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து சுருள வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். மிகவும் ருசியான குதிரைவாலி டிரை ஃப்ரூட்ஸ் பொங்கல் தயார்.
மசாலாப் பொங்கல்:
பச்சரிசி ஒரு கப்
பயத்தம் பருப்பு கால் கப்
தேங்காய்ப் பால் ஒரு கப்
காய்கறிகள் 1/2 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
கொத்தமல்லி சிறிது
புதினா ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் 2
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 2 பற்கள்
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவைக்கு
தாளிக்க:
மிளகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/4 ஸ்பூன்
சோம்பு 1/4 ஸ்பூன்
பட்டை ஒன்னு
லவங்கம் ஒன்னு
ஏலக்காய் ஒன்று
நெய் 4 ஸ்பூன்
கேரட், பீன்ஸ், குடைமிளகாய் காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ளவும். பயத்தம் பருப்பு, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து கழுவி ஐந்தரை கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
பாதி அளவு வெந்ததும் தேங்காய் பால், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காய்கறிக் கலவை, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, உப்பு அனைத்தையும் சேர்த்து ரெண்டு விசில் விட்டு எடுக்கவும். நெய் 4 ஸ்பூன் விட்டு மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பொரிந்ததும் பொங்கலில் கொட்டிக்கிளற மிகவும் ருசியான மசாலா பொங்கல் தயார். செய்வதும் எளிது ருசியும் அபாரமாக இருக்கும்.
கரும்புச்சாறு பொங்கல்:
பச்சரிசி 1 கப்
கரும்புச்சாறு 3 கப்
முந்திரிப் பருப்பு 10
காய்ந்த திராட்சை 10
நெய் 4 ஸ்பூன்
ஏலக்காய் 2
அரிசியைக்களைந்து பத்து நிமிடம் ஊறவைத்து குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். சிறிது பிரஷர் போனதும் திறந்து மூன்று கப் கரும்புச்சாறு, ஏலக்காய் பொடி, 2 ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு விசில் வரும்வரை வைத்தெடுக்கவும். மீதி இரண்டு ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறவும். மிகவும் ருசியான கரும்புச் சாறு பொங்கல் தயார். இனிப்பு அதிகம் வேண்டுபவர்கள் கால் கப் பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறலாம்.
இதுவரை காணாத ருசியில் ரொம்ப அருமையாக இருக்கும் இந்த கரும்புச்சாறு பொங்கல். சுவைத்துதான் பாருங்களேன்!