
தொப்பையை குறைக்க தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறீர்களா? அதே சமயம் டயட்டையும் மேற்கொள்கிறீர்களா? அப்படியானால் காலையில் அந்த தொப்பையைக் குறைக்க உதவும், சில காலை உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வாருங்கள்.
முக்கியமாக ஒருசில கஞ்சி தொப்பையை குறைக்க உதவும். அதில் ஒன்றுதான் பார்லி கஞ்சி. அதுவும் இந்த கஞ்சியுடன் காய்கறிகளை சேர்த்து செய்யும்போது, சுவையாக இருப்பதோடு, நீண்ட நேரம் வயிறும் நிரம்பியிருக்கும்.
உங்களுக்கு வெஜிடேபிள் பார்லி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் பார்லி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பார்லி - 1 கப்
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 5 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பார்லி அரிசியை போட்டு, நன்கு வறுக்கவேண்டும். பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவேண்டும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவேண்டும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கவேண்டும்.
அடுத்து அதில் மிளகுத் தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி, 5 கப் நீரை ஊற்றி கிளறி, மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கலந்துவிட வேண்டும்.
பின் பொடித்து வைத்துள்ள பார்லி அரிசியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கவேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான வெஜிடேபிள் பார்லி கஞ்சி ரெடி...!