நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொட்டுக்கடலை உணவிற்கு ருசியைக் கூட்டி பல வழிகளில் பயன் தருகிறது. அதேபோல, பொட்டுக்கடலையை. பொடியாக்கி வைத்துக்கொள்ள பலவிதங்களில் அது பயன் தரும். இட்லிக்கு சட்னி அரைக்கும்போது, உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் அதில் பொட்டுக்கடலை பொடி 1 ஸ்பூன் சேர்க்க அதிகமான உப்போ, காரமோ குறைவதோடு ருசியும் அதிகரிக்கும்.
குடமிளகாய், கத்தரிக்காய், கோவைக்காய்களில் ஸ்டஃப் செய்து வறுக்கும்போது அதில் பொட்டுக்கடலை பொடியை சேர்த்து செய்ய, கறி க்ரிஸ்பாக நீண்ட நேரம் இருக்கும்.
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு மற்றும் அசைவ வறுவல்கள் செய்யும்போது வழக்கமான பொடியுடன் பொட்டுக்கடலை பொடியை சேர்த்துக்கொள்ள விரைவில் கிரிஸ்பாகி சிவந்து வரும். தட்டை, கோடுவளை போன்ற பட்சணங்கள் செய்யும்போது பொட்டுக்கடலை பொடியை சேர்க்க அதிகமான கிரிஸ்போடு வாயில் போட்டதும் கரையும்.
பீன்ஸ், கேரட் போன்ற காய்கறி பொரியல்களில் சேர்க்க, தேங்காய் துருவல் அதிகம் சேர்க்காமலேயே சுவையாக இருக்கும். பருப்புப் பொடி போலவே பொட்டுக்கடலை பொடியை தயாரித்து வைத்துக்கொள்ள சூடான சாதத்தில் நெய் ஊற்றி பிசைந்து அப்பளத்தோடு சுவைக்க சூப்பராக இருக்கும்.
உசிலி செய்கையில் காய்களை வேகவிட்டு அதில் பொட்டுக்கடலை மாவை தாராளமாகக் கலந்து பிசிறி விட்டால் கடலைப்பருப்பு உசிலியை விட ருசியாக இருக்கும்.
குருமா, கிரேவி, கூட்டு இவை நீர்த்து இருந்தால் 2 டீஸ்பூன் பொட்டுக்கடலை பொடியை சேர்த்து கலந்து கொதிக்க விட்டு இறக்கவும். இதனால் சுவை அதிகரிப்பதோடு, திக்காகவும் இருக்கும். வெங்காய பக்கோடாவிற்கு கடலை மாவு சேர்த்து செய்வது போல் சிறுதானிய அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து உப்பு, காரம் சேர்த்து பக்கோடா தயாரிக்க சுவையாக இருக்கும்.
சூப்பிற்கு சோள மாவு சேர்ப்பது போல் பொட்டுக்கடலை பொடியை சேர்க்க திக்காவதுடன் சுவையையும் தரும். பொட்டுக்கடலை இனிப்பு உருண்டை இந்த பொட்டுக்கடலை பொடி கைவசம் இருந்தால் சட்டென செய்து விடலாம்.
கஞ்சி வைத்துக் குடிக்க சுவையாக இருக்கும். பலவிதங்களில் பயன் தரும் பொட்டுக்கடலை பொடியை கைவசம் வைத்திருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதோடு சுவையாகவும் சாப்பிடலாம்.