

கீரைக்கூட்டுக்கு தேங்காயை அரைத்து விடுவதற்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்தால் மேலும் பிரமாதமான ருசியில் இருக்கும்.
பேரீச்ச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி, அதில் பால் சிறிதளவு விட்டு அரைத்து தேன் கலந்து சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
பழைய சாதம் மிகுந்துவிட்டால், அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து, ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து, ஆப்பமாக செய்யலாம்.
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது அத்துடன் சூடான பால் சேர்த்தால் சப்பாத்தி மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
மைதா அல்வா செய்யும்போது பதம் தவறி நீர்த்துவிட்டால், சிறிதளவு சோளமாவைக் கரைத்து சேர்க்கலாம். அல்வா கெட்டிப்படுவதுடன் சுவையும் அதிகரிக்கும்.
பரோட்டாவுக்கு மாவு பிசையும்போது, தண்ணீருக்குப் பதிலா சோடாவை ஊற்றிப் பிசைந்தால் செய்யும் பரோட்டா மிருதுவாக இருக்கும்.
பச்சை மிளகாயை நறுக்கும்போது நீண்ட நேரத்துக்கு கை எரிச்சலாக இருக்கிறதா? நறுக்கும் முன் கைகளில் தேங்காய் எண்ணைய் சிறிதளவு தடவிக்கொண்டால் எரிச்சல் ஏற்படாது.
கேரட், பீட்ரூட் போன்ற இங்கிலிஷ் காய்கறிகள் வாடிப் போனால் நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் சிரமமின்றி நறுக்கலாம்.
வெள்ளைப் பூசணிக்காயைத் துருவி கொஞ்சம் உப்பு சேர்த்து, தேவையான அளவுக்கு இஞ்சி, பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து தயிரில் கலந்து சுவை மிகுந்த தயிர் பச்சடி செய்யலாம்.
காய்கறிகளை பாலித்தீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அந்தக் கவர்களில் கோணி ஊசியால் குத்தி துளைகள் போட்டபின், காய்களைஅதில் வைத்தால், அந்தக் காய்களை பல நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
பொங்கலில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், சிறிதளவு ரவையை வறுத்துப் பொங்கலோடு சேர்த்துக்கிளறினால் பொங்கல் கெட்டியாகிவிடுவதோடு அதன் ருசியும் நன்றாக இருக்கும்.
மழைக்காலங்களில் பொரித்த அப்பளம், வற்றல், வடகம் போன்றவை விரைவில் நமர்த்துவிடும். இவற்றை டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் இரண்டு நாட்களானாலும் மொறு மொறுப்புடன் இருக்கும்.