மோர்க்குழம்பு முதல் இஞ்சித் துவையல் வரை வீட்டுச் சமையலுக்கு பயனுள்ள டிப்ஸ்!

மோர்க்குழம்பு, இஞ்சித் துவையல், பாகற்காய், வெண்டைக்காய், தோசை, இட்லி, சப்பாத்தி வரை அன்றாட வீட்டுச் சமையலை சுவையாகவும் சத்தானதாகவும் மாற்றும் எளிய சமையல் டிப்ஸ் தொகுப்பு!
home-cooking-tips
home-cooking-tips
Updated on

முருங்கைப்பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, மோர்க்குழம்பில் போட்டு  ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள். மோர்க்குழம்பு சுவை மிகுந்து இருக்கும்.

இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வறுத்த மிளகாய் வற்றலுடன் சேர்த்து வதக்கி புளி, உப்பு சேர்த்து அரைப்பதோடு கொஞ்சம் வெல்லமும் சேர்த்தால் சுவையான இஞ்சித் துவையல் தயார்.

பாகற்காயை நறுக்கி உப்பு, தயிர் சேர்த்து நீரில் சிறிது நேரம் ஊறவைத்து நன்றாகப் பிழியவேண்டும். அதன்பிறகு பொரியல் செய்தால் கொஞ்சமும் கசப்பு தெரியாது.

தோசைக்கல் பிசுபிசுப்பாக இருந்தால், சூடான தோசைக் கல்லில் சிறிது புளித்த மோரும், உப்பும் தடவித் தேய்த்தால் தோசைக்கல் பளிச்சிடும்.

பொரித்த அப்பளங்கள் மூன்றை பொடியாக்கி, தேவைக்கேற்ப துருவிய தேங்காய், புளி, பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் சுவையான துவையல் ரெடி.

வெண்டைக்காயை வேகவைப்பதை விட, வதக்கினால், அதன் சத்துக்கள் அனைத்தையும் முழுமையாக பெற முடியும்.

இட்லிக்கு ஊறவைக்கும்போது ஒரு பிடி அவல் சேர்த்து அரைத்தால் இட்லி சாஃப்டாக இருக்கும்.

நான்கு பிரட் துண்டுகளை நீரில் நனைத்து கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் மிருதுவான, சுவையான சப்பாத்தி தயார்.

மீதமான ரவை உப்புமாவுடன் சிறிது அரிசிமாவைக் கலந்து வடைபோலத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

மழை நாட்களில் பொரித்த அப்பளம் சீக்கிரம் நமத்துப்போய்விடும். எனவே அப்பளத்தைப் பொரித்து சூடு ஆறியதும் ஒரு ஸ்டீல் டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்துவிடலாம். இரண்டு நாட்கள் கழித்து  எடுத்தாலும் அப்பளம் மொறு மொறுவென்று இருக்கும்.

முருங்கைக்கீரையை மரத்திலிருந்து  பறித்ததும் உடனடியாக நீரில் நனைத்துவிட்டால், இரண்டு நாட்கள் ஆனாலும் உதிராமல் அப்படியே இருக்கும்.

தோசை திருப்பியை தண்ணீரில் நனைத்து பயன் படுத்தினால் கல்லில் தோசை ஒட்டாமல் எளிதாக வரும்.

வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது கடைசியில் கடலை மாவு கொஞ்சம் தூவி சில நிமிடங்கள் அடுப்பை ' சிம்'மில் வைத்துக்கிளறி இறக்கினால் சுவை நன்றாக இருக்கும்.

பாகற்காய் குழம்பு வைக்கும்போது கேரட் சேர்த்தால் குழம்பின் கசப்புத்தன்மை குறைந்துவிடும்.

சாம்பாருக்குப் போட காய்கறி கைவசம் இல்லையா? சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும்போது, அதில் ஒரு பிடி பச்சை வேர்க்கடலையைப் போட்டு, அதைப் பயன்படுத்தி சுவை மிகுந்த சாம்பார் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
தண்ணீரையும் பணத்தையும் தொடர்புப்படுத்திப் பேசுவது ஏன்?
home-cooking-tips

தேன்குழல், தட்டை, சீடை, கை முறுக்கு போன்றவற்றுக்கு மாவு பிசையும்போது, தண்ணீர் விட்டுப் பிசைவதற்குப் பதிலாக, திக்கான தேங்காய்ப்பால் விட்டுப் பிசைந்தால், சுவையும், மணமும் அபாரமாக இருக்கும்.

மொறுமொறுப்பான அடை செய்ய அடைமாவில் வாழைப் பூவை அரைத்துவிட்டால் போதும்.

புளிக்குழம்பு, காரக்குழம்பு, சாம்பார் வைக்கும்போது, தக்காளியை நசுக்கிப்போடாமல், மிக்ஸியில் அரைத்துச் சேர்த்துப் பாருங்கள். ருசியாகவும், கெட்டியாகவும் இருக்கும்.

கோவைக்காய் பழுத்துவிட்டால் அதை நறுக்கி, வதக்கி தேவை யான உப்பு, புளி, மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி தொக்கு செய்தால் சூப்பர் சுவையில் இருக்கும்.

சாம்பார், கூட்டு போன்றவற்றுக்கு அரைத்துவிட தேங்காய் இல்லையென்றால் சர்க்கரைவள்ளிக்கிழங்கை  அரைத்து விடலாம். தேங்காய் அரைத்துவிட்டது போலவே இருக்கும் என்பதோடு கொழுப்புச் சத்தும் குறைந்த அளவில்தான் இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com