

நிறைய பேருக்கு சமையல் என்றாலே பாகற்காய் போல கசக்கும். காரணம் சமையலில் வேலை பளு அதிகம் இருக்கும் என்பதால். அதிலும் வெங்காயம் உரிப்பது, கீரைகளை ஆய்ந்து வைப்பது, இஞ்சி பூண்டு உரித்து வைப்பது என்று இதற்கே நேரம் சரியாக போய்விடும் என்பதால் இப்போதெல்லாம் நிறைய பேர் செல்போன் பார்க்கும் நேரத்தை இழக்க விரும்பாமல் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துவிடுகிறார்கள்.
ஆனால் இது ஆரோக்கியமா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். சரி சமையல் கசக்காமல் இனிக்க என்ன செய்ய வேண்டும் கூடியவரை சமையலுக்கு தேவையானவற்றை முன்னேற்பாடாக செய்து வைத்துக்கொள்வது நல்லது. அப்படி மிகவும் தேவைப்படும் ஒரு பொருள்தான் இஞ்சி பூண்டு விழுது.
விடுமுறை நாட்களில் இஞ்சியையும் பூண்டையும் உரித்து அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் தேவைப்படும் பொழுது அதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். நேரமும் மிச்சமாகும். சரி இந்த விழுதை எத்தனை நாட்கள் ஃப்ரிட்ஜில் வைப்பது உடலுக்கு இதனால் கெடுதல் வராதா? என்று கேட்பவர்களுக்காகவே இந்த பதிவு.
இஞ்சி–பூண்டு விழுதை (Ginger Garlic Paste) சரியாக தயாரித்து ஃபிரிட்ஜ்ல் வைத்தால் பொதுவாக 7 முதல் 10 நாட்கள் நாட்கள் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். கூடுதலாக நல்லெண்ணெய் சேர்த்து மேல் பகுதி முழுவதும் சரியாக மூடப்பட்டு வைத்தால் 2 வாரம் வரை கூட கெடாமல் இருக்கும். குறிப்பாக Ice tray-ல் portion ஆக freeze செய்தால் 1 முதல் 2 மாதம் வரை கூட பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
நீண்ட நாட்கள் இந்த விழுது கெடாமல் இருக்க டிப்ஸ் (Tips)
இஞ்சி, பூண்டு சிறிதும் தண்ணீர் இல்லாமல் (dry) அரைக்கவும்.
அரைத்த பின் 1–2 ஸ்பூன் நல்லெண்ணெய் (அல்லது ரிஃபைண்ட் ஆயில்) சேர்க்கவும். காற்று புகாத கண்ணாடி பாட்டிலை பயன்படுத்தி சுத்தமான கரண்டியால் சேமிக்கவும். ஒவ்வொரு முறை அதை எடுக்கும்போது சுத்தமான, உலர்ந்த கரண்டி மட்டும் பயன்படுத்தவும்.
வீட்டில் தயாரிக்கும் இஞ்சி பூண்டு விழுதில் பச்சை வாசனை / பூஞ்சை (fungus) வந்தால் கட்டாயம் பயன்படுத்தக்கூடாது.
இப்படி பாதுகாக்கப்படும் விழுது வீட்டில் அரைப்பதா அல்லது கடையில் வாங்கிய விழுதா என்பதிலும் வேறுபாடு உள்ளது.
கடையில் வாங்கிய இஞ்சி-பூண்டு விழுது திறக்காத (Sealed) பாக்கெட் / பாட்டில் என்றால் வெயில் இல்லாத, குளிர்ச்சியான இடத்தில் வைக்கும்போது 6 மாதம் – 1 வருடம் வரை அதாவது Expiry date வரை பாதுகாப்பாகவே இருக்கும். பாக்கெட் திறந்த பிறகு (Opened) Fridge-ல் வைத்தால் சுமார் 30 – 45 நாட்கள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிலர் இந்த ரெடிமேட் விழுதை உபயோகித்து அப்படியே வைப்பது உண்டு. அது தவறு. வெளியில் வைத்தால் (Room temperature) 5 – 7 நாட்களுக்குள் கெட வாய்ப்பும், பூஞ்சை / புளிப்பு வாசனையும் ஏற்படலாம்.
விழுது கெட்டுப்போனதற்கான அறிகுறிகளாக புளிப்பு வாசனை, மேலே படியும் பூஞ்சை (white / green spots), நிறம் மாற்றம், கொலகொலவென அதிக நீர்த்தன்மை ஆகியவை உண்டாகும். இவைகள் இருந்தால் தயவுசெய்து சமையலில் சேர்க்காதீர்கள். மீறி பயன்படுத்தினால் உடல் உபாதைகள் நிச்சயம்.