தீபாவளி பலகாரம்: மொறுமொறுப்பான 5 சுவையான பலகாரங்கள் செய்யும் எளிய முறைகள்!

வீட்டிலேயே எளிதாகச் செய்து அசத்தக்கூடிய ஆரோக்கியமான மற்றும் மொறுமொறுப்பான தீபாவளி பலகாரங்களின் சிறப்புத் தொகுப்பு.
தீபாவளி பலகாரம் - Diwali Snacks Recipes
தீபாவளி பலகாரம் - Diwali Snacks Recipes
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on: 

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், கார வகைகள் என வீடே கொண்டாட்டத்தில் களைகட்டும். அதிலும் வீட்டில் தீபாவளி பலகாரம் செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வது தனி சந்தோஷம்!

முறுக்கு, அதிரசம், லட்டு, மைசூர்பாகு, மைதா பிஸ்கட் என ஒவ்வொரு வீட்டிலும் விதவிதமான பலகாரங்களின் மணம் கமகமக்கும். பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே தேவையான பொருட்களை வாங்கி, மாவு அரைத்து, பலகாரங்கள் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இந்த வருட தீபாவளிக்கு எளிதாய் செய்யக்கூடிய ஐந்து வகை ரெசிபிகள் இதோ …

பூண்டு காரச் சீடை

தேவையான பொருட்கள்:

* அரிசி மாவு – 1 கப்

* உளுந்து மாவு – ¼ கப்

* வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

* பூண்டு – 6 பல்

* மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

* எள் – 1 டீஸ்பூன்

* உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

பூண்டைத் தோல் நீக்கி விழுதாக அரைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, உளுந்து மாவு, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், எள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாகப் பிசையவும். சிறிய உருண்டைகளாக உருட்டி, மிதமான சூடுள்ள எண்ணெயில் போட்டு நன்றாகப் பொரித்தெடுக்கவும். சீடை முழுவதும் வெந்து மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். எண்ணெயை வடித்து ஆறியதும் சேமிக்கவும்.

கம்பு காரத் தட்டை

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு – 1 கப்

அரிசி மாவு – ½ கப்

பொட்டுக்கடலை மாவு – ¼ கப்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

எள் – 1 டீஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

தீபாவளி பலகாரம் - Diwali Snacks Recipes
தீபாவளி பலகாரம் - Diwali Snacks Recipes

செய்முறை:

கம்பு மாவை லேசாக வறுத்து ஆறவைக்கவும். அதனுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள், எள், பெருங்காயம், உப்பு சேர்த்துக்கலக்கவும். சிறிது சூடான எண்ணெய் ஊற்றி, தண்ணீர் தெளித்துத் தட்டை மாவுப் பதத்துக்குப் பிசையவும். சிறிய உருண்டைகளாக உருட்டி, தட்டையாகத் தட்டி மிதமான சூடுள்ள எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். நன்றாக ஆறியதும் சேமிக்கவும்.

கோதுமை மாவு இனிப்பு முறுக்கு

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு – 1 கப்

* அரிசி மாவு – ¼ கப்

* சர்க்கரைப் பொடித்தது – ¾ கப்

* ஏலக்காய்த்தூள் – ½ டீஸ்பூன்

* நெய் – 2 டேபிள்ஸ்பூன்

* எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவை ஆவியில் வேகவைத்து ஆறியதும் சலித்துக்கொள்ளவும். அதனுடன் அரிசி மாவு, சர்க்கரைப் பொடி, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் தெளித்து முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசையவும். முறுக்குக் குழலில் மாவை நிரப்பி, சூடான எண்ணெயில் சிறிய முறுக்குகளாகப் பிழிந்து மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். முழுமையாக ஆறியதும் டப்பாவில் சேமிக்கவும்.

தீபாவளி பலகாரம் - Diwali Snacks Recipes
தீபாவளி பலகாரம் - Diwali Snacks Recipes

ஓட்ஸ் கார முறுக்கு

தேவையான பொருட்கள்:

* ஓட்ஸ் – 1 கப்

* அரிசி மாவு – ½ கப்

* பொட்டுக்கடலை மாவு – ¼ கப்

* மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

* எள் – 1 டீஸ்பூன்

* வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

* உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஓட்ஸை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். அதனுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள், எள், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் தெளித்து மென்மையான மாவாகப் பிசையவும். முறுக்குக் குழலில் மாவை நிரப்பி, எண்ணெயில் சிறிய முறுக்குகளாகப் பிழியவும். மிதமான தீயில் இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து எண்ணெயை வடிக்கவும். ஆறிய பிறகு டப்பாவில் சேமிக்கவும்.

குதிரைவாலி மாவு ஓம காரப் பக்கோடா

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி மாவு – 1 கப்

அரிசி மாவு – ¼ கப்

ஓமம் – 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

எள் – 1 ஸ்பூன்

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

சூடான எண்ணெய் – 1 ஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி மாவு, அரிசி மாவு, ஓமம், மிளகாய்த்தூள், எள், பெருங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும். சூடான எண்ணெயை ஊற்றி, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாகப் பிசையவும். மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் பிழிந்து சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். நன்றாக மொறுமொறுப்பாக வந்ததும் எடுத்து ஆறவிடவும். முழுமையாக ஆறிய பிறகு காற்றுப் புகாத டப்பாவில் சேமிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு மூன்றே பொருட்கள்... வாயில் கரையும் சுவையில் பாசிப்பயறு லட்டு!
தீபாவளி பலகாரம் - Diwali Snacks Recipes

பண்டிகை காலத்தில் வீட்டில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி பலகாரங்கள் செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. பெரியவர்கள் சொல்லித்தரும் பக்குவங்களைக் கற்றுக்கொண்டு, அடுத்த தலைமுறையினருக்கும் பாரம்பரியத்தை எடுத்துச் செல்வோம். அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் இனிய திருநாளாகத் தீபாவளியைக் கொண்டாடுவோம்!

logo
Kalki Online
kalkionline.com