கேரளாவின் பாரம்பரிய இனிப்புகளில் ஒன்றான தெரளி அப்பம் அதன் தனித்துவமான சுவை மற்றும் தயாரிப்பு முறையால் புகழ்பெற்றது. பண்டிகை காலங்களில் செய்யப்படும் இந்த இனிப்பு மிகவும் சுவையானது. தெரளி அப்பம் அதன் தயாரிப்பு முறையில் உள்ள பாரம்பரியத்தையும், சுவையில் உள்ள இனிமையையும் ஒருங்கிணைத்து கேரளா உணவுகளில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பதிவில் தெரளி அப்பம் செய்முறையை விரிவாகப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்
வெல்லம் - ¼ கிலோ
தேங்காய் துருவல் - ½ மூடி வாழைப்பழம் - 3
ஏலக்காய் தூள் - ½ ஸ்பூன்
தெரளி இலை - 10
பனை ஓலை கீற்று - 10
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் அரிசி மாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வறுத்து, தட்டில் கொட்டி ஆர வைக்கவும். இது அப்பத்திற்கு நல்ல நிறத்தையும் வாசனையையும் தரும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் துருவல், வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் இதில் வாழைப்பழம், ஏலக்காய் தூள் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும். வாழைப்பழம் அப்பத்திற்கு ஈரப்பதத்தையும் இனிமையையும் சேர்க்கும்.
இறுதியாக இந்த கலவையை தெரளி இலையில் வைத்து பனை ஓலையைப் பயன்படுத்தி ஒன்றாகக் கட்டி இவற்றை ஒரு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்தால் சூப்பரான சுவையில் தெரளி அப்பம் தயார்.
உங்கள் வீட்டில் தெரளி இலைகள் இல்லை என்றால் வாழை இலைகளையும் பயன்படுத்தலாம். வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை, தேங்காய் துருவலுக்கு பதிலாக தேங்காய் பால் போன்றவற்றை பயன்படுத்தலாம். இட்லி குக்கர் இல்லை என்றால் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து நீராவியில் வேக வைக்கலாம். தயாரித்த தெரளி அப்பத்தை பிரிட்ஜில் வைத்து மூன்று நாட்கள் வரை சாப்பிடலாம்.
தெரளி அப்பம் செய்முறை என்பது வெறும் சமையல் குறிப்பு மட்டுமல்ல அது ஒரு பாரம்பரியத்தை கடத்தும் செயலாகும். மேலே குறிப்பிட்ட செயமுறையைப் பின்பற்றி நீங்களும் உங்கள் வீட்டில் தெரளி அப்பத்தைத் தயாரித்து அதன் சுவையை அனுபவிக்கவும்.