
இன்றைக்கு சுவையான ராகி சப்பாத்தி மற்றும் முட்டை சட்னி ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
ராகி சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்.
தண்ணீர்-1 கப்.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- 1 தேக்கரண்டி.
ராகி மாவு-1 கப்.
நெய்-தேவையான அளவு.
ராகி சப்பாத்தி செய்முறை விளக்கம்.
முதலில் அடுப்பில் பேனை வைத்து அதில் 1 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் 1 கப் ராகி மாவை சேர்த்து கலந்துவிட்டு இறக்கிவிடவும்.
மாவு நன்றாக சூடு ஆறியதும் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
இப்போது உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ராகி மாவில் போட்டு பிரட்டி எடுத்து சப்பாத்தியாக திரட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து 1 தேக்கரண்டி நெய்விட்டு சப்பாத்தியை போட்டு சுட்டு எடுத்தால், சுவையான ராகி சப்பாத்தி தயார்.
முட்டை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய்-2 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-2
கருவேப்பிலை-சிறிதளவு.
வெங்காயம்-1
தக்காளி-1
உப்பு-தேவையான அளவு.
முட்டை -2
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-2 தேக்கரண்டி.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
முட்டை சட்னி செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொண்டு கடுகு 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நறுக்கிய பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இத்துடன் 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிதாக நறுக்கிய தக்காளி 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இப்போது 2 முட்டையை இதில் சேர்த்து கலந்துவிட்டு கடைசியாக கொத்தமல்லி சிறிது சேர்த்து இறக்கினால் சுவையான முட்டை சட்னி தயார்.
நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.