எளிதாக செய்யலாம் எள்ளுப் பொடியும் கசகசா பொடியும்!

healthy recipes
healthy recipesImage credit - youtube.com
Published on

பொதுவாகவே குழம்பு, ரசம் வைக்காதவர்கள் கூட பொடி அரைத்து வைப்பதென்றால் எளிதாக செய்வார்கள். சாதத்தில் எண்ணெய் அல்லது உருக்கிய நெய்யுடன் பொடி போட்டு சாப்பிடுவது சிலருக்கு மிகவும் பிடிக்கும். மதிய நேரத்தில்  சூடான சாதத்துக்கு பொடி வகைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற சத்தான ருசியான பொடி வகைகள் செய்முறை இங்கு.

எள்ளில் 20 விழுக்காடு புரதமும், 50விழுக்காடு எண்ணெயும், 16 விழுக்காடு மாவு பொருட்களும் உள்ளன. ஆராய்ச்சி ஒன்றில் எள்ளு விதை மற்றும் நல்லெண்ணெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளது.  ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி எலும்புகளை வலுவாக்கும். குடல் சார்ந்த பிரச்னைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியையும் செய்யும். எள்ளை குழந்தைகள் முதல் பெரியவர் வரை தினசரி உணவில் சேர்த்து பயன்பெறலாம்.

எள்ளுப்பொடி:
தேவை:

எள்ளு 200 கிராம்
சிவப்பு மிளகாய் - 10 அல்லது 12
கெட்டி பெருங்காயம் -ஒரு அங்குலம் கருவேப்பிலை - சிறிது
உப்பு -தேவையானது

செய்முறை:
எள்ளை  நன்றாக கல் மண் போக சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். வரமிளகாய்களை சிறிது எண்ணெய்விட்டு சிவக்க வறுத்து எடுத்து அதனுடன் ஆறிய எள்ளையும், வறுத்த பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து மிக்ஸி வைப்பர் மோடில்  நரநரவென்று   அரைத்து பாட்டிலில் போட்டு மூடி வைத்து உபயோகிக்கவும். கறுப்பு எள்ளில் பொடி செய்வது மிகவும் நல்லது. இல்லையெனில் வெள்ளை எள்ளையும் பயன்படுத்தலாம்.
      
பாப்பி விதைகள் என அழைக்கப்படும் கசகசா சமையல் பொருளாக மட்டுமின்றி ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுகிறது.   கசகசா என்பது நமது உணவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கசகசா இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், செரிமானத்தை சீராக்குதல், நல்ல தூக்கம் தருவது போன்ற பல நன்மைகள் தருகிறது. கசகசாவில் கால்சியம், இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. அவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும், அவற்றில் உள்ள லிக்னான்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டு புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் தடுக்கின்றன.

கசகசா பொடி:
தேவை:

கசகசா 2- கப்
வரமிளகாய் - 8
உளுத்தம்பருப்பு- 1/2 கப்

இதையும் படியுங்கள்:
பிரச்னைகளை அடக்கி ஆளும் சக்தி நம்மிடம் உள்ளது!
healthy recipes

செய்முறை:
உளுத்தம் பருப்பையும் வர மிளகாய்களையும் (எண்ணெய் இல்லாமல்) நன்கு வறுத்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். கசகசாவையும் குறைந்த தீயில் வைத்து வறுத்து மிக்ஸியில் இட்டு பொடி செய்யவும்.  இந்த உளுந்து வற்றல் பொடி, கசகசா வற்றல் பொடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து  காற்று புகாமல் பாட்டிலில் நிரப்பி கொள்ளவும். தேவையானபோது எடுத்து உப்பு போட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் அல்லது காய்கறி மற்றும் குழம்பின் கெட்டித்தன்மைக்கும் இந்தப் பொடியை பயன்படுத்தலாம். கசகசா அதிக விலை என்பதால் இதை கவனத்துடன் செய்து  பராமரிப்பது அவசியம்.

முக்கியமாக கருகாமலும் அதே நேரம் வாசம் வரும் வரையும் பொருள்களை வறுக்கும் பக்குவத்தில்தான் பொடிகளின் ருசி அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com