
காளான் பக்கோடா
தேவை:
மஷ்ரூம் – 6,
கடலைப்பருப்பு – 100 கிராம், துவரம்பருப்பு – 50 கிராம், அரிசி – ஒரு டீஸ்பூன்,
வர மிளகாய், பச்சை மிளகாய் – தலா 4,
பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
காளானை சுத்தம் செய்து, வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி, வரமிளகாய் ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும். அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, மஷ்ரூம் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து, காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். மொறு மொறு காளான் பக்கோடா தயார்.
******
காளான் மிளகு சாதம்
தேவை:
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
காளான் - 250 கிராம்
வெங்காயம் - 1
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காளானை நன்றாக நீரில் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி, உப்பு, காளானை சேர்த்து வதக்கி, பின் பொடி செய்து வைத்துள்ள மிளகை சேர்த்து, மிதமான தீயில் காளானை வேக வைக்க வேண்டும். பின்னர் அதில் சாதத்தைப் போட்டு, நன்கு ஒன்று சேரும் வரை 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான காளான் மிளகு சாதம் ரெடி.
******
காளான் ஊறுகாய்
தேவை:
காளான் - 1 கிலோ
பூண்டு - 1/2 கிலோ
மஞ்சள்பொடி - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்ப்பொடி - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/2 லிட்டர்
செய்முறை:
காளானை இரண்டாக வெட்டி வைக்கவும். பூண்டை தோல் இல்லாமல் உரித்து இரண்டையும் கலக்கவேண்டும்.
இவற்றை உப்புடன் சேர்த்து 2 நாள் வைக்கவேண்டும். மூன்றாம் நாள் எலுமிச்சை சாறையும் ஊற்றி ஊறவைக்கவேண்டும். கடுகு, வெந்தயம் இரண்டையும் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு வெடித்தவுடன், பொடி செய்து வைத்துள்ள கடுகு, வெந்தயம், மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, பெருங்காயம் ஆகியவற்றை போடவும். பின் உப்பில் ஊறவைத்த காளானையும் உடன் சேர்த்து கிளறி பத்து நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். நன்கு ஆறிய பின்பு சுத்தமான, ஈரமில்லாத அகலமான ஜாடியில் போட்டு காற்று புகாவண்ணம் அடைத்து வைக்கவும். ருசியான காளான் ஊறுகாய் தயார்.
******
காளான் ஊத்தப்பம்
தேவை:
தோசை மாவு - 2 கப்
வெங்காயம் நறுக்கியது - 2
நறுக்கிய குடைமிளகாய் - 1
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
கருவேப்பிலை நறுக்கியது - 1 கைப்பிடி
காளான் நறுக்கியது - 1 கப்
உப்பு, எண்ணெய்- தேவைக்கு
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் காளான் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து ஆறவைக்கவும். தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் வதக்கிய காளான் மசாலாவை தூவவும். மிதமான சூட்டில் 3 நிமிடம் மூடி வைக்கவும். பின் திருப்பி போட்டு 1 நிமிடம் கழித்து, சூடாக பரிமாறவும். செம டேஸ்ட் காளான் ஊத்தப்பம் தயார்.