
திருநெல்வேலி என்றதும் முதலில் நமக்கு நியாபகம் வருவது இருட்டுக் கடை அல்வாதான். அல்வாவை முகலாயர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர், இது பூர்வீகமாக ஈரான் நாட்டில் இருந்து உருவானது. வட இந்திய அல்வா சுவைக்கும், தென்னிந்திய அல்வாவின் சுவைக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. திருநெல்வேலி அல்வா பற்றி அனைவரும் அறிந்ததுதான். அதனால் நெல்லையின் சிறப்பு வாய்ந்த மற்ற உணவு வகைகளை பார்ப்போம்.
கூட்டாஞ்சோறு:
கூட்டாஞ்சோறு திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற மதிய உணவு. சிறுவர்கள் கூட்டாஞ்சோறு செய்யும் பலவகை காய்கறிகள் எல்லாம் கலந்து செய்வார்கள். அதுபோலவே இந்த கூட்டாஞ்சோறு ஒரு வரையறையில் இருக்காது. அரிசி, துவரம் பருப்பு, கத்திரிக்காய், கேரட், மாங்காய், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், பூண்டு இன்னும் மற்ற காய்கறிகள், பச்சை வாழைப்பழம், புளி தண்ணீர் எல்லாம் சேர்த்து உலையில் கொதிக்க வைக்கப்பட்டு, பின்னர் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து இறக்கி பரிமாறப்படுகிறது.
நெல்லை சொதி:
நெல்லையின் பாரம்பரியத்தில் சொதி முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தப் பகுதி திருமணம் மற்றும் மற்ற விசேஷங்களில் சொதி கட்டாயமாக இடம் பெறுகிறது. சொதி தேங்காய்ப் பாலில் செய்யப்படும் ஒரு காரம் குறைந்த குழம்பு வகையாகும். சின்ன வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கேரட், முருங்கைக்காய், கத்திரிக்காய், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு எல்லாம் சேர்த்து செய்யப்படுகிறது. இதன் சுவை கிட்டத்தட்ட குருமா போன்று இருக்கும். திருநெல்வேலியை பொறுத்தவரை இதை மாப்பிள்ளை சொதி என்றும் அழைக்கின்றனர். புது மாப்பிள்ளைக்கு வைக்கப்படும் விருந்தில் இது முக்கிய இடம் பெறுகிறது.
நெல்லை அவியல்:
திருநெல்வேலி பகுதி திருமணங்களில் இந்த அவியல் கட்டாயம் இடம் பெறும். கேரளாவிற்கும், கன்னியாகுமரிக்கும் அருகில் உள்ள மாவட்டமாக இருப்பதால் இவர்களின் உணவு வழக்கத்தில் தேங்காய் அதிகம் இடம் பெறுகிறது. இதில் பச்சை வாழைப்பழம் சேர்க்கப்படுவது மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு புதிய ருசியாக இருக்கும். கத்திரிக்காய், வெங்காயம் முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சிறிதளவு தயிர் சேர்த்து இந்த அவியல் செய்யப்படுகிறது. இந்த செய்முறை தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி செய்யப்படுகிறது. எல்லா ஊர்களில் அவியல் செய்தாலும் நெல்லை அவியலின் சுவை தனியாக இருக்கும். இதில் இனிப்பும், புளிப்பும், காரமும் சேர்ந்து வித்தியாசமான சுவையில் இருக்கும்.
உளுந்துக்களி:
பொதுவாக உளுந்துக்களி எல்லா மாவட்டத்திலும் செய்யப்படும் ஒரு உணவு வகையாகும். பருமடைந்த பெண்களுக்கு ஆரம்ப காலத்தில் இந்த உளுந்தக் களியினை செய்து கொடுக்கும் வழக்கம் எல்லாம் ஊர்களிலும் உண்டு. உடலுக்கு பலத்தையும் எலும்பினை வலுவாக்கவும் இந்தக் களி உதவுகிறது. இதற்கு கருப்பு உளுந்து, சிறிது அரிசி, நல்ல எண்ணெய், பனை வெல்லம் ஆகியவை சேர்த்து அல்வாபோல செய்யப்படுகிறது. உளுந்தக்களி நல்ல ருசியானது. நெல்லையில் மட்டுமே இது பொதுவான உணவுப் பொருளாக இருக்கிறது. மற்ற ஊர் களிக்கும் நெல்லை உளுந்தக்களிக்கும் உள்ள வித்தியாசம் இங்கு பனைவெல்லம் சேர்க்கப்படும். பிற இடங்களில் வெல்லம் சேர்க்கப்படுகிறது.
கருப்பட்டி காபி
இது திருநெல்வேலியின் சிறப்புகளில் ஒன்று. மற்ற ஊர்களில் காபியில் சீனிதான் கலக்கப்படும். நெல்லையில் மட்டுமே காபியில் பனை வெல்லம் கலக்கப்பட்டது. இன்று அனைத்து ஊர்களிலும் கருப்பட்டி காபி பிரபலமாக இருந்தாலும் அதற்கு எல்லாம் விதை திருநெல்வேலியில் போடப்பட்டது. சாதாரண பாலில், காபி டிகாஷன், கருப்பட்டி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. வித்தியாசமான சுவையாக இருந்தாலும் இது ஆரோக்கியமானது.